உள்ளூர் செய்திகள்

வாயலுார் பள்ளிகளுக்கு புரஜெக்டர் கருவி

மாமல்லபுரம்: பாவினி அணுமின் நிறுவனம், வாயலுார் பள்ளிகளுக்கு புரஜெக்டர் கருவி வழங்கியது. கல்பாக்கத்தில், பாவினி அணுமின் நிறுவனம் இயங்கி வருகிறது. கல்பாக்கம் சுற்றுப்புற கிராமங்களில் நலத் திட்டங்களை நிறைவேற்றிவரும் இந்நிறுவனம், அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துகிறது. அதன் அடிப்படையில், வாயலுார் அரசு உயர்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, உயாலிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு, கணினி டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில், பாடம் நடத்துவதற்கேற்ப, புரஜெக்டர் கருவி வழங்க வேண்டுமென ஊராட்சி தலைவர் அசோகன், இந்நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதை பரிசீலித்த நிறுவன தலைவர் பிரபாத்குமார், இப்பள்ளிகளுக்கு அவற்றை வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, நிறுவன பொறியாளர் சாம்ராஜ், அசோகன் முன்னிலையில், பள்ளி தலைமையாசிரியர்களிடம், கருவிகள் வழங்கப்பட்டன. அழகேசன் நகர், டென்னிஸ் விளையாட்டு திடலுக்கு, வலையும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்