பசுமைப்பணியில் அரசு பள்ளி மாணவர்கள்
திருப்பூர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன; இது தொடர்பான கருத்தரங்கம், இன்று நடைபெறுகிறது. வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், தனியார் நிறுவனங்கள், அரசு துறைகள், தன்னார்வ அமைப்புகள் இணைந்துள்ளன. தனியார் பள்ளிகள் சங்கமும் இணைந்து, மரக்கன்று வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது, மாவட்ட கல்வித்துறையும் இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், 650 பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் மூலம், மரம் வளர்ப்பு, மழைநீர் சேமிப்பு, சுற்றுப்புற சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட, சுற்றுச்சூழல் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் மட்டு மன்றி, பொதுமக்களிடமும் விழிப்புணர்வு பணிகள், நாடகம், கருத்தரங்குகள், களப்பணி மேற்கொள்வதே, இத்திட்டத்தின் நோக்கமாகும். இதில், ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுகின்றனர்; 650 குழுக்களில், மூவாயிரம் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் இணைந்து, மரம் வளர்ப்பு பணி மேற்கொள்ளுமாறு, பள்ளிகளில் உள்ள சுற்றுச்சூழல் மன்றம், பசுமைப்படைக்கு, மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியபடி, ஆளுக்கு ஐந்து மரக்கன்று வளர்க்க வேண்டும்&' என்ற அறிவுரையை நிறைவேற்றுதல்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் மரக்கன்று நட்டு, பராமரித்தல்; மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில், மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, திட்டமிடப்பட்டுள்ளது. இதுவிர, அரசு பள்ளிகளில் உள்ள, நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சாரண, சாரணியர் இயக்க மாணவ, மாணவியரும், மரம் வளர்க்கும் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளனர். மரக்கன்று நடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், பல்வேறு தொழில் நுட்பம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, திருப்பூர், பல்ல டம், பொங்கலூர், திருப்பூர் வட்டாரத்தில் உள்ள, 120 பள்ளிகளை சேர்ந்த பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் பயிற்சி கருத்தரங்கம் நடத்தப்படுவதோடு, அடுத்தடுத்த நாட்களில், மரக்கன்று நட்டு பராமரிக்கப்படும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.