பள்ளியில் சமூக விரோத செயல்கள்
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதியில், சமூக விரோதிகளால் பாழாகி வரும் அரசுப்பள்ளிகளை பாதுகாக்க, போலீசாரும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலை, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கின்றனர். சுற்றுப்பகுதியிலுள்ள அந்தியூர், முக்கோணம், ராகல்பாவி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். மர்ம நபர்களால் இப்பள்ளியில் தொடர்ந்து நடக்கும் சமூக விரோத செயல்களுக்கு விடிவு காலம் இல்லாமல், பள்ளி நிர்வாகத்தினரும் மாணவர்களும் நாள்தோறும் வேதனையடைந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் பாதிப்பு இப்பள்ளியில், மாணவர் களுக்கான குடிநீர் கழிப்பறை, மைதானம், போதிய வகுப்பறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளது. இருப்பினும், இரவுக்காவலர் ஒருவர் இல்லாததால், அடிப்படை வசதிகள் முழுவதுமே பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் பின்புறம் உள்ள மைதானத்தை சுற்றுப்பகுதியிலுள்ள பலரும் விளையாட பயன்படுத்துகின்றனர். விளையாடுவதோடு நிறுத்திவிடாமல், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை உடைப்பது, வகுப்பறை சுவர்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். கடந்தாண்டு வரை பள்ளியில் பின்புறம் சுற்றுச்சுவர் இல்லை. இதனால், இரவில் மர்ம நபர்கள் நுழைந்து மது அருந்தும் செயல்களும் வழக்கமாகின. இந்நிலையால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதையடுத்து, சுற்றுச்சுவர் அமைக்க தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது. முழுமையில்லாத சுற்றுச்சுவர் இதையடுத்து, பொதுப்பணித்துறையின் சார்பில், சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இருப்பினும் முழுமையாக கட்டப்படாததால், சமூக விரோதிகளின் அட்டகாசம் முடிவுபெறாமல் தற்போது வரை தொடர் கதையாகியுள்ளது. மது அருந்திவிட்டு, பாட்டில்களை வகுப்பறை திண்ணைகளில் போட்டுச்செல்கின்றனர். காலை நேரத்தில், பல்வேறு கனவுகளோடு வரும் குழந்தைகளுக்கு, பாட்டில்களை சுத்தப்படுத்த வேண்டிய பரிதாபமே நிகழ்கிறது. ஒவ்வொரு நாளும் பள்ளிக்குள் நுழைந்து, இச்சம்பவங்களை பார்க்கும் குழந்தைகள், இப்பிரச்னை என்று தீருமோ என்ற அச்சத்திலேயே நாட்களை கடக்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். சற்றே சிதிலமடைந்த கட்டடத்தில், கற்களை உடைத்து விடுவதும், மேற்கூரைகளை சேதப்படுத்துவதுமாக, தற்போது அக்கட்டடத்தை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளியுள்ளனர் சமூக விரோதிகள். குடிநீர் தொட்டியையும் விட்டு வைக்கவில்லை பள்ளியில் இரண்டு குடிநீர் தொட்டிகள் உள்ளன. அதிலும் ஒன்றை சேதப்படுத்தியுள்ளதால், ஒன்றை மட்டுமே பயன்படுத்துகின்றனர். மாணவ, மாணவியரின் அடிப்படை வசதிகளுக்காக கட்டப்பட்ட, பயன்பாட்டிற்கே வராத கழிப்பறைகளையும் விட்டு வைக்காமல் உடைத்தெறிந்துள்ளனர். இயற்கை வளத்தை பாதுகாக்க மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து பள்ளி வளாகத்தில் நட்ட, 50 மரக்கன்றுகளை துளிர் விடும் முன்னரே, அவற்றை நாசமாக்கியுள்ளனர். இவ்வாறு, தொடர்ந்து விடுமுறை நாட்களில் அரங்கேறிவரும் இந்த சமூக விரோத செயல்களுக்கு போலீசாரும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பள்ளி நிர்வாகத்தினருக்கும் துயரத்தையும், பெற்றோரிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரவுக்காவலர் இல்லாததே காரணம் பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஓரிரண்டு பேர் என்றால் ஆசிரியர்களே பிடித்து, நடவடிக்கை எடுப்போம். சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களிலிருந்து நுாற்றுக்கும் மேற்ப்பட்டோர் வந்து விளையாடுகின்றனர். ஓரிரு விடுமுறை நாட்களில், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று எச்சரித்தாலும் அலட்சியப்படுத்தி, அடுத்த விடுமுறையில் மீண்டும் தங்கள் அட்டகாசத்தை துவக்கி விடுகின்றனர். பள்ளியில் மாணவர் எண்ணிக்கை சரிவை நோக்கி செல்வதற்கும் பாதுகாப்பில்லாத பள்ளி சூழலையே பெற்றோர் காரணமாக கூறுகின்றனர். இரவு காவலர் இல்லாததே இப்பிரச்னைக்கு முக்கிய காரணம். போலீசார், விடுமுறை நாட்களிலும், இரவு நேரத்திலும் பள்ளியை கண்காணித்தால், இதற்கு தீர்வு காண முடியும். கல்வித்துறையும், இவ்வாறு பிரச்னை ஏற்படும் பள்ளிகளுக்கு தற்காலிக இரவு காவலர்களையாவது நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.