மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!
புதுச்சேரி: கல்லுாரி மாணவர்கள் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாததை கண்டித்து, ஏரிப்பாக்கம் கூட்ரோட்டில் நேற்று நடந்த சாலை மறியலால், அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூரமங்கலம் காலனி-நல்லுார் காலனி இளைஞர்களுக்கு இடையே கொத்தாம்பாக்கத்தில் கடந்த 3ம் தேதி நடந்த கிரிக்கெட் போட்டியில், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, 4ம் தேதி நல்லுார் பஸ் நிறுத்தம் அருகே அதே ஊர் காலனியை சேர்ந்த பிரதாப், சதீஷ் உள்ளிட்ட 20 பேர் கும்பல், பஸ்சை வழி மறித்து, சூரமங்கலம் காலனியை சேர்ந்த மருத்துவக் கல்லுாரி மாணவர் அன்புராஜ், பி.இ., இரண்டாம் ஆண்டு பயிலும் சந்துரு ஆகிய இருவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் குறித்து நல்லுார்பேட் பகுதியை சேர்ந்த பிரதாப், சதீஷ், கவுதம், வினாயகபுரம் அஜித் உள்ளிட்ட 20 பேர் மீது திருபுவனை போலீசில் அன்புராஜ் புகார் அளித்தார். இந்நிலையில், 4 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு தரப்பிற்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி, திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் அங்காளன் எம்.எல்.ஏ.,வை கண்டித்து, சூரமங்கலம் கிராம மக்கள் நேற்று காலை 6.45 மணிக்கு ஏரிப்பாக்கம் கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், முருகன் பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, காலை 9:15 மணிக்கு சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. போராட்டம் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், மடுகரை, கடலுார் மார்க்கத்தில், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.