பள்ளிப் படிப்பை விரும்பாத பழங்குடியினர்!
ஊட்டி: நீலகிரியில், பழங்குடியின குழந்தைகள், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுவது, கணக்கெடுப்புப் பணியில் தெரிய வந்துள்ளது. நீலகிரியில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், மாவட்டத்தில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் என, நான்கு வட்டாரங்களில், எஸ்.எஸ்.ஏ., ஆசிரியப் பயிற்றுனர்கள், அலுவலர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம், இந்த கணக்கெடுப்புப் பணி நடந்து வருகிறது. இரு மாதங்கள் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பில், வீடு, வீடாக செல்லும் களப்பணியாளர்கள், பள்ளி செல்லாமல் உள்ள, 6 முதல் -14 வயது வரையுள்ள குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து வந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். வீடுகள் மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தேயிலை தோட்டம், பிற தொழில் சார்ந்த இடங்களிலும் கணக்கெடுப்புப் பணி நடந்து வருகிறது. கடந்த, 5ம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அதிகபட்சமாக, கூடலுாரில், 259 பேர், ஊட்டியில், 17, குன்னுாரில், 33, கோத்தகிரியில், 37 என, இதுவரை, 347 பேர் பள்ளி செல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், கூடலுாரில், பழங்குடியின குழந்தைகளில் மட்டும், 250 பேர் பள்ளி செல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கூறியதாவது; கூடலுாரில் உள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லை. இதனால், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தாமல் உள்ளனர். கண்டறியப்படும் பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் அனைவரும், கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி, அவர்களது வயதுக்கேற்ற வகுப்பில், அருகே உள்ள பள்ளி மற்றும் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் நேரடியாக சேர்க்கப்படுவர். அதன் மூலம், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியும். கணக்கெடுப்பை மேற்கொள்ளும் அலுவலர்கள், தங்கள் பகுதிக்கு வரும் போது, அங்குள்ள மக்கள், தங்கள் பகுதியில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விபரங்களை தெரிவித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.