உள்ளூர் செய்திகள்

‘வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது’

இக்கருத்தரங்கை ‘தினமலர் - கல்விமலர்’ மற்றும் சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம், உளவியல் துறை இணைந்து நடத்தின. நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய கல்வியாளர், ஆலோசகர்களின் கருத்துக்கள் இங்கே: காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லலிதா: சிறுவயதில் இருந்தே வெற்றி, தோல்வி; நல்லது, கெட்டது; சந்தோஷம், துக்கம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி எதுவும் மனதை பாதிக்க விடக்கூடாது. வாழ்க்கை பொன்னானது. அதில் வரும் சில தோல்விகளுக்காக நீங்கள் இப்போது வருந்தினால், அடுத்த 10-20 ஆண்டுகள் கழித்து இதை நினைவு கூர்ந்தீர்களானால், ‘இதற்காகவா கவலை பட்டு காலத்தை வீணடித்தோம்’ என்று உங்களுக்கே தோன்றும். தோல்வியை வெற்றிக்கான படிகளாக அமைத்துக்கொள்ள வேண்டும். தோல்விக்கு பிறகு கடின முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறியவர்களின் உதாரணங்கள் ஏராளம்.   சென்னைப் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ரங்கநாதம்: திறமையில்லாதவர்கள் என்று இவ்வுலகில் யாரும் இல்லை. நேரம், செயலைப் பொறுத்து ஒவ்வொருவருடைய திறமை வெளிப்படுகிறது. வாழ்க்கை என்பது நம் அனைவருக்கும் தரப்பட்டுள்ள அருமையான வாய்ப்பு. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்பது தான் முக்கியம். சில பெற்றோர் தங்களது குழந்தைகளை செல்லமாக வளர்த்துவிட்டு பிளஸ் 2 வகுப்பின்போது படிப்பை மட்டுமே முன்னிறுத்தி அதுவே வாழ்க்கை என்ற தோற்றத்தை உருவாக்கிவிடுகிறார்கள். இதனால் மாணவ, மாணவியருக்கு டென்ஷன், பயம் ஏற்படுகிறது. இவை தோல்விக்கு வித்திடுகிறது. தோல்வி ஏற்படும் போது தனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற மனோபாவத்திற்கு வர காரணமாகிவிடுகிறது. எனவே, இதில் பெற்றோரின் செயல்பாடு மிக முக்கியம். தோல்வியடைந்த மாணவர்கள் மற்றொரு முயற்சியில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் பெறவேண்டும். தோல்வி குறித்து மனதளவில் உள்ள தடையை அகற்றவேண்டும். தோல்வி அனைவருக்கும் இயல்பே. அதனை ஆராய்ந்து புரிந்து கொண்டு, தோல்விக்கான தவறு மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது சுய முயற்சி, திறமையால் சாதியுங்கள். ஒவ்வொரு நாளையும் புத்துணர்வுடன் அணுகுங்கள்; செயல்படுங்கள். தேர்வுகள் துறை இணை இயக்குனர் கருணாகரன்: தோல்வியை தாங்கிக்கொள்ளாத மனப்பக்குவத்தால் வெட்கம், அவமானம், ஏமாற்றம், உற்சாக இழப்பு, அச்சம், தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. விதி ஒரு கதவை அடைக்குமானால், நம்பிக்கை மற்றொரு கதவை திறக்கும். மாணவர்களுக்கு இலக்கு முக்கியம். அந்த இலக்கை நிர்ணயிக்க முயற்சி வழிகாட்டும். நான் யார்? என்ற கேள்வியை உங்களுக்குள் கேட்டுக்கொண்டு அதற்கு விடை தேடுங்கள். அப்போது உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி எப்படி நிகழ்ந்தது, ஏன் நடந்தது, எதனால் நடந்தது என்று ஆராயுங்கள். வாழ்க்கையில் வெற்றிபெற குறுக்குவழி என்று ஏதும் கிடையாது. கடின உழைப்பு மட்டும் தான் வெற்றிக்கான வழி. உள்ளார்ந்த ஆற்றல் வெளியே வரும் போது செல்வம், பதவி, பெருமை மூன்றும் உங்களைத் தேடி வரும். படிக்கும் போது, ஆற்றலை ஒழுங்கிணையுங்கள். திட்டமிடும்போது தான் வெற்றி உங்கள் கையில் வரும்.   ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா: பொதுத்தேர்வில் 65 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர்; 35 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவதில்லை என்று வைத்துக்கொண்டால், பலரும் அந்த 65 சதவீதம் பேரைத்தான் எண்ணி பாராட்டுகின்றனர். ஆனால், அந்த 35 சதவீதம் பேருக்குத்தான் ஏதாவது செய்தாக வேண்டும். ‘நான் தோல்வியடைந்து விட்டேன்; அதனை மீண்டும் செய்யாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்தகட்டத்தை சிந்திக்கும்போதே பாதி வெற்றி உங்களுக்கு கிடைத்தாகி விட்டது. பாட்டு போட்டிகளில் முதல் மூன்று பேர் தான் பரிசு பெற முடியும். ஆனால், பொதுத்தேர்வுகளில் அனைவரும் தேர்ச்சி பெறலாம். நாடு முழுவதும் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் நுழைவுத் தேர்வில் 100 பேர் வடிகட்டி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கிறது. அப்படி கடின போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்களே செமஸ்டர் தேர்வில் வெற்றி பெறாமல் போகின்றனர். எனவே, வெற்றி-தோல்வி என்பது அனைவருக்கும் நிகழ்வதே, தனக்கு மட்டும்தான் நிகழ்கிறது என்ற மனப்போக்கை விட்டெறிய வேண்டும். மாணவர்கள் தனது தோல்வியை தங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாதபோது, பெற்றோரிடம் தான் பகிர்ந்துகொள்ள முடியும். அப்போது ஊக்கம் கொடுக்க வேண்டிய பெற்றோரே அவர்களை உதாசினப்படுத்துவது, மாணவர்கள் தவறான முடிவை எடுக்க தூண்டுகிறது. எனவே, வெற்றி கிடைக்காத நேரத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக தங்களது குழந்தைகளை கையாள வேண்டும். இவ்வாறு கல்வியாளர்கள், ஆலோசகர்கள் தங்களது கருத்தை பகிர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்