மாணவர் விடுதிகளில் இடங்கள் அதிகரிப்பு
சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் கூடுதலாக 4,000 இடங்களை ஏற்படுத்த, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு:பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், உணவு வசதியுடன் இலவசமாக தங்கிப் படிக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1,200 மாணவ, மாணவியர் விடுதிகள் இயங்குகின்றன. இவற்றில் தற்போது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் 69 ஆயிரத்து 16 மாணவ, மாணவியர் தங்கி படிக்கின்றனர். இவ்விடுதிகளில் மேலும் கூடுதலாக மாணவ, மாணவியரை சேர்க்க வேண்டும் என்பதற்காக, இரண்டு கோடியே 21 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில் பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகளில் 2,400 இடங்களும், கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் 1,600 இடங்களும் என மொத்தம் 4,000 இடங்களை புதிதாக ஏற்படுத்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.