உள்ளூர் செய்திகள்

ஒருமைப் பல்கலை சாதகமா, பாதகமா?

சென்னை மாநிலக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி, கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி, கோவை அரசு கல்லூரி ஆகிய ஐந்து அரசு கல்லூரிகளை ஒருமைப் பல்கலைக்கழகங்களாக மாற்ற, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் தமிழ்மணி கூறியதாவது:அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றினால், காலப்போக்கில் அங்கு இளநிலை படிப்புகள் இல்லாமல் போகும். மாணவர்கள் கல்விக் கட்டணம் உயரும். அரசு ஆதரவு பெற்றவர்கள் துணைவேந்தராக நியமிக்கப்படுவர். ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை, கல்விக்குழு அரசு தலையீடு அதிகமாக இருக்கும். பல்கலைக்கழகமாக மாறினால், ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு அதிகமாக இருக்கும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. தற்போது, 69 அரசு கல்லூரிகளில் தான் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இவற்றை பல்கலைக்கழகமாக மாற்றுவதால், இலவச கல்வி இல்லாமல் போக வாய்ப்பாகிவிடும். இவ்வாறு தமிழ்மணி கூறினார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் பழனி கூறியதாவது:சட்டசபையில், கடந்த 15ம் தேதி, ‘சாத்தான் குளம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியில் கட்டணம் அதிகமாக இருப்பதாக எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர். அரசு கல்லூரிகளில் இருப்பதைப் போலவே இக்கல்லூரிகளிலும் கட்டணம் இருக்க வேண்டும். அதற்கான சுற்றறிக்கை அனுப்பப்படும். ஏற்கனவே பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கூறியுள்ளோம்’ என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அவரது பேச்சு, பல்கலைக்கழகமாக மாற்றினால், மாணவர்களின் கட்டணம் உயரும் என்ற எங்களது ஐயத்தை உறுதி செய்துள்ளது. 100 சதவீத அரசு உதவியுடன் பல்கலைக் கழகங்களில் அளிக்கப்பட்டுள்ள உறுப்புக் கல்லூரிகளிலேயே கட்டணத்தை மாற்ற அரசால் ஆணையிட முடியவில்லை. சுற்றறிக்கையையும், துணைவேந்தரிடமும் அரசு வேண்டுகோள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிதர்சனமான உண்மை நிலையை கவனத்தில் கொண்டு, ஐந்து அரசு கல்லூரிகளும் பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டால், அங்கும் இதே நிலைக்கே அரசு தள்ளப்படும். இவ்வாறு பழனி கூறினார். இக்குற்றச்சாட்டுகளை மறுத்த, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி கூறியதாவது:மற்ற அரசு கல்லூரிகளில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதே கட்டணம் தான் ஒருமைப் பல்கலைக்கழகங்களிலும் வசூலிக்கப்படும். அரசு கல்லூரிகளில் தான் அரசின் கட்டுப்பாடு அதிகளவில் இருக்கும். ஒருமைப் பல்கலைக்கழகமாக மாற்றினால், அவை தன்னிச்சையாக செயல்படலாம். எதிர்ப்பவர்களின் கோரிக்கை என்ன என தெரிவித்தால், நிறைவேற்றுகிறோம் எனக் கூறியுள்ளோம். ஆனால், கோரிக்கையையும் தெரிவிக்காமல், ஒருமைப் பல்கலைக்கழகங்கள் வேண்டாம் என கூறுகின்றனர். ஒருமைப் பல்கலைக்கழகத்தில் மேலும் பல பலன்கள் உள்ளன. அவற்றை, அப்பல்கலைக்கழகங்களை உருவாக்கும்போது தான் உணர முடியும். அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தில் உள்ள ஒரு சிலர் மட்டுமே, ஒருமைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பலர் எங்களைச் சந்தித்து, ஒருமைப் பல்கலைக்கழகமாக மாற்றும் அரசின் திட்டத்தை வரவேற்றுள்ளனர். இவ்வாறு ராமசாமி கூறினார். உயர்கல்வி வளர்ச்சிக்கு அதிகளவில் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது. அதேநேரத்தில் அரசுக் கல்லூரிகளை வெறும் பெயரளவில் பல்கலைக்கழகங்களாக மாற்றி பயனில்லை. அரசு கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் போது, அங்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநிலக் கல்லூரியில் கட்டடங்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. இக்கல்லூரியை பெயரளவில் பல்கலைக் கழகமாக மாற்றுவதுடன் விட்டுவிடாமல், அதன் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதே நிலை தான் மற்ற அரசுக் கல்லூரிகளிலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்