வரைவு பொது பாடத்திட்ட கருத்தரங்கம்
தமிழ்நாடு அரசுப் பள்ளி கல்வித்துறை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தயாரித்து வெளியிட்ட வரைவு பொது பாடத்திட்டம் - 2009 குறித்த கருத்தரங்கம், சென்னை பல்கலைக்கழகத்தின் மெரீனா வளாகத்தில் உள்ள பவள விழா அரங்கில் நடந்தது. இக்கருத்தரங்கத்தில் சமச்சீர் கல்விக் குழுத் தலைவர் முத்துக்குமரன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் அதிகாரப்பூர்வ வலைதளம் www.samacheerkalvi.in துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முத்துக்குமரன் பேசியதாவது: சமச்சீர் கல்வியைப் பொறுத்தவரை ஐந்து பாடங்களுக்கு மட்டுமே பாடத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளனர். இந்த திட்டத்தில், குழந்தைகளுக்கு தேவையான கதைகள், கைத்தொழில், உடற்பயிற்சி, சுகாதாரம் மற்றும் மொழிப்பற்று உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறவில்லை. இதில், பாடத்திட்டங்களைத் தவிர்த்து வசதிகள், மாணவர் - ஆசிரியர் விகிதம், தேர்வு எழுதும் முறை பற்றிய 144 பக்கங்கள் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட மாணவர்களுக்குத் தேவையில்லாத விவரங்கள் நிறைய உள்ளன. தமிழுக்கு 40 பக்கங்களும், கணிதத்திற்கு 54 பக்கங்களும் மற்றும் அறிவியலுக்கு 46 பக்கங்களும் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்த திட்டத்தில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து 40 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை மாணவன் பார்த்தால் பயந்து விடுவான். இன்றைய மாணவர்கள் தாய்மொழியை சரியாக கற்றுக் கொள்வதில்லை. ஒரு மாணவனுக்கு கல்விப் பயிற்சியை துவங்கும் போதே ஆங்கிலத்தை கற்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு புதிய மொழியை கற்பதற்கு 30 முதல் 40 நாட்கள் போதுமானது. ஆங்கிலத்தை கற்பது தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று பாடத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டைப் பாருங்கள், அவர்களது தாய்மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். அமெரிக்காவிற்கு சவால் விடும் அளவில் பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கின்றனர். இதை நாமும் பின்பற்ற வேண்டும். தற்போதைய பாடத்திட்டங்கள் மாணவர்கள் படிக்க ஏதுவாக இல்லை. தமிழ் மொழியின் மேன்மையை குறிக்க கல்வி என்ற சொல்லே போதும். தமிழை எப்படி கற்பிக்க வேண்டும் என்று திருக்குறள் முதல் பல தொன்மையான நூல்களில் கூறப்படுகிறது. பள்ளிகளுக்கான பாடத்திட்டங்கள் வகுப்பதை அரசியல்வாதிகளிடம் விடுவது சரியல்ல, அது எதேச்சதிகார ஆட்சி உணர்வை மாணவர்களிடம் வரவழைத்து விடும். இதைப் பற்றி கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு முத்துக்குமரன் பேசினார்.