அதிக விளையாட்டு... குறைவான வசதி
2003ம் ஆண்டுக்கு முன் பள்ளிகளுக்கு இடையே, மாநில அளவில் ஹாக்கி, வாலிபால், கூடைபந்து, கபடி, கோ-கோ, பூப்பந்து, எறிபந்து, டேபிள் டென்னிஸ், இறகு பந்து மற்றும் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ள, புதிய விளையாட்டுகளை தமிழகத்தின் அப்போதைய விளையாட்டு துறை உறுப்பினர் செயலர் டேவிதார் (2003ம் ஆண்டு) அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் 2012ல் நடக்கும் ஒலிம்பிக்கில், அதிக பதக்கங்கள் பெறலாம் என நினைத்தார். அதற்கான கட்டமைப்பு வசதிகளை மட்டும் செய்யவில்லை.2003லிருந்து தற்போது வரை ஹேண்ட் பால், குத்துச்சண்டை, வாள்சண்டை, டேக்வாண்டோ, பீச் வாலிபால், சிலம்பம், செஸ், கேரம், டெனிகாய்ட், ரோடு சைக்ளிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ஸ்குவாஷ் என ஒவ்வொரு விளையாட்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஏற்கனவே இருந்த விளையாட்டுகள், பள்ளி உடற்கல்வி ஆசிரியரால் இலவசமாக கற்றுத்தரப்பட்டது. புதிய விளையாட்டுகளை மாணவர்கள் தனியாக கட்டணம் செலுத்தி வெளியில் கற்கின்றனர்.மைதானம், பயிற்சியாளர் இல்லை : பீச் வாலிபால் போட்டி கடற்கரை மணலில் விளையாடுவது. கடற்கரை உள்ள சில மாவட்ட மாணவர்கள் தான் முறையான பயிற்சி பெறுகின்றனர். சில பள்ளிகளில் நான்கு லோடு மணலை கொட்டி, பீச் வாலிபால்(?) விளையாடுகின்றனர். ஸ்குவாஷ் மிகவும் காஸ்ட்லியான விளையாட்டு. சென்னை நேரு அரங்கில் மட்டுமே சகல வசதிகளுடன் கூடிய அரங்கு உள்ளது.தேனி மாவட்டத்தில் ஸ்குவாஷ் அரங்கு அரைகுறையாக கட்டப்பட்டுள்ளது. வேறெங்கும் ஸ்குவாஷ் மைதானமோ, பயிற்சியாளர்களோ இல்லை. ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பெரும்பாலும் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தான் பங்கேற்கின்றனர். குத்துச்சண்டை, டேக்வாண்டோ, வாள்சண்டை போட்டிகளின் நிலைமையும் அப்படித் தான் உள்ளது.மண்டல அளவில் நடக்கும் வாள்சண்டை, டேக்வாண்டோ, சிலம்பம் உட்பட சில போட்டிகளின் பல்வேறு பிரிவுகளில் சிங்கிள் என்ட்ரியாக மாணவர்கள் பங்கேற்கின்றனர். போட்டியில் எதிர்த்து விளையாட ஆள் இருந்தால் தானே வெற்றி, தோல்வி தெரியும். ஒற்றை ஆளாய் பங்கேற்கும் மாணவர்களை, நேரடியாக மாநிலப் போட்டிக்கு அனுப்புகின்றனர். இவர்களின் மூலம் ஒலிம்பிக் பதக்க கனவு நிறைவேறுமா?தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, அரசு பயிற்சியாளரை நியமித்தால் தான் அதிக மாணவர்கள் பங்கேற்கமுடியும். இதன்மூலம் போட்டியும் கடினமாகும். அப்போது தான் திறமையான வீரர்களை உருவாக்க முடியும். ஒலிம்பிக் கனவு நனவாகும்.