கோவையில் சமச்சீர் கல்வி கருத்தரங்கம்
கோவை: சமச்சீர் கல்வி பற்றிய விளக்க கருத்தரங்கம், பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் நாளை (நவ., 11ம் தேதி) நடைபெறவுள்ளது. தமிழக பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு மாவட்டந்தோறும் கருத்துக்கள் கேட்டறியும் பணி நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சமச்சீர் கல்வி பற்றி போதுமான முறையில் விளக்கப்பட்டு விட்டது. ஆனால் பெற்றோரில் பலருக்கு சமச்சீர் கல்வி பற்றி ஆழமாக தெரியவில்லை. இந்த குறையை போக்க, நாளை மாவட்ட பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினருக்கு சமச்சீர் கல்வி பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது. பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மணி மேல்நிலைப்பள்ளியில் நாளை மாலை 6.00 மணிக்கு இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ‘ராக்’ அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கவுரவ இயக்குனர் விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்று சமச்சீர் கல்வி பற்றி விளக்கம் அளிக்கின்றனர்.