‘சுயவேலைவாய்ப்பின் மூலம் தேசத்தை உயர்த்தலாம்’
ஸ்ரீவைகுண்டம்: பட்டம் பெற்ற மாணவர்கள் சுயவேலை வாய்பின் மூலம் தேசத்தின் நிலையை உயர்த்த பாடுபடவேண்டும் என ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் பெருமாள் சாமி பேசினார். ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியின் 45வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சங்கர நாராயணன் தலைமை வகித்தார். கல்லூரி துறைத்தலைவர்களான இயற்பியல் துறை பீட்டர் அருள் அல்போன்ஸ், வணிகவியல் துறை சந்திரசேகர், தாவரவியல் துறை முத்துகுமாரசாமி, வேதியல் துறை நயினார், கணிதத்துறை சுப்பையா, விலங்கியல் துறை சுப்பிரமணியன், பொருளியல் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாநில தகவல் ஆணையர் பெருமாள்சாமி பேசியதாவது, அழகான கிராம சூழலில் உள்ள இந்த கலைக்கல்லூரியில் திறமையான மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்களையும், மற்றவர்களையும் நான் பாராட்டுகிறேன். கல்வி ஒழுக்கத்தையும், உண்மையையும் கற்று கொடுக்கிறது. அதுமட்டுமல்ல அவைகளைத் தேடிப் பெறுவதற்கு உறுதுணை புரிகிறது. மனிதனை மேம்படுத்தி அவனுடைய சகோதர மனப்பான்மை, ஒற்றுமை உணர்வு ஆகியவற்றை வளர்க்க உதவுகிறது. கல்வி, வேலை தேடுவதற்கு என்று மாணவர்கள் நினைக்கக் கூடாது. கல்வி அன்பு, நேர்மை, செயல்திறமை ஆகியவற்றை கற்று கொள்வதற்கு என்பதனை மாணவர்கள் முதலில் உணர வேண்டும். பார்வை இழந்த எவனும் சாவு மிக அருகில் இருப்பினும் அதனை உணர முடியாது. அதே போல் கல்வி இல்லாதவன் அருகில் செல்வங்கள் இருப்பினும் அதனை அவன் உணரமாட்டான். கல்வி என்பது உலகத்தை மாற்றும் மந்திர சொல். நாகரிகத்தின் மந்திரம் மனிதன் தரமானவனாக மாறுவது கல்விகற்பதால்தான். சக்திவாய்ந்த கல்வியால்தான் பல தேசங்கள் விழிப்படைந்துள்ளது. அறிவு தொழிற்சாலையில் உருவாகாது. ஜாண்சன், அப்துல்கலாம், சுவாமி விவேகானந்தர், சச்சின் டெண்டுல்கர் ஆகிய சாதனையாளர்கள் கல்வியின் பயன் உணர்ந்து சமுதாயத்தில் சரித்திரம் படைத்தார்கள். இன்று பெருகி வரும் உலகமயமாக்கலில் போ ட்டி மனப்பான்மை பெருகி வருகிறது. தொழில்நுட்ப ரீதியான சூழல் வளர்ந்து வருகிறது. இந்த பட்டம் உங்களுக்கு வாழ்க்கையை எதிர்கொண்டு சமாளிக்க உதவும் ஆயுதம். ஒரு மாணவன் பி.ஏ., பட்டம் பெற்றான். தாயிடம், தந்தையிடம், உற்றார் உறவினரிடம், நண்பர்களிடம் தாம் பி.ஏ., பட்டம் பெற்ற நிகழ்வினை பெருமையுடன் சொன்னான். அகமகிழ்ந்தனர். நேராக கடற்கரைக்கு ஓடினான். ஏ கடலே உன் பெரும் இரைச்சல் அலையை நிறுத்து. நான் உன்னிடம் பேச வேண்டும் என்றான். அலை நின்றது. நான் பி.ஏ., பாஸ் ஆகிவிட்டேன் என்றான். கடல் சொன்னது நீ படித்தது பி.ஏ., என்ற இரண்டு எழுத்துதான். நீ இன்னும் படிக்க வேண்டியது மீதம் 24 எழுத்துக்கள் உள்ளது என்றாள் கடல் அன்னை. அவனிடம் நாணம் ஏற்பட்டது. கற்றது கையளவு என்பதை புரிந்து கொண்டான். இந்த பட்டம் வெறும் திறவுகோல்தான். இன்னும் நீங்கள் இந்த உலகத்தில் கற்க வேண்டிய அனுபவ பாடம் அதிகம் உள்ளது. நீங்கள் இதுவரை இருந்த உலகம் வேறு, இனி நீங்கள் பயணிக்க போகிற உலகம் வேறு. அது சவால்கள், போட்டிகள் நிறைந்தது. நாம் அனைவரும் இந்த உலக நாடக மேடையில் நடிகர்கள். இதில் யார் திறமையானவர்கள் என்பதை நிரூபிப்பதில் தான் வெற்றி உள்ளது என்று சேக்ஸ்பியர் கூறுகிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்றுதான் விரும்புகிறார்கள். ஆசிரியர் ஆக வேண்டும் என விரும்புங்கள். இது உன்னதமான பணி. இதன் மீதும் கவனம் திருப்புங்கள், இதுமட்டுமல்ல அரசு வேலைகளை விட சுயதொழில் செய்து நீங்கள் முதலாளிகளாக, தொழில் அதிபர்களாக உலக அரங்கில் இந்தியாவை உயர்த்துங்கள். பலம், பலவீனம், வாய்ப்பு ஆகியவற்றை பயன்படுத்தி வாழ்க்கையை வெற்றி கண்டு சிறந்த குடிமகனாக வாழுங்கள் என்று பேசினார்.விழாவில் பேராசிரியர்கள் நிசார், சேதுராமன், சூரியன், ஸ்ரீதர், முருகன், பெருமுடையான், குழந்தை பாண்டியன், பொன்னுசாமி விஸ்வநாதன், சுடலை, சுப்பிரமணியன் , சின்னதம்பி, பிரேமலதா, மாரியப்பன், குமாரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். 122 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.