பல்கலை நிதி: பன்னீர்செல்வம் கண்டனம்
சென்னை: பல்கலைகளுக்கு உரிய நேரத்தில் நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்துவது கண்டனத்துக்கு உரியது என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:சென்னை பல்கலையின் மொத்த மாத செலவுக்கு, 18.61 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி, சென்னை பல்கலையிடம் 5 கோடி ரூபாய் மட்டும் இருந்துள்ளது. சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அன்றாட செலவுகளுக்கு மட்டும் 11.50 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதியில் இருந்தும், அறக்கட்டளை நிதியில் இருந்தும், 7.60 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலை நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஆனால் தி.மு.க., அரசு அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு கூட நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலைமைதான் அனைத்து பல்கலைகளிலும் நிலவுவதாக தகவல்கள் வருகின்றன. பல்கலைகளுக்கு உரிய நேரத்தில் நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்துவது, கடந்த ஆண்டுக்கான கூடுதல் நிதியை கொடுக்காமல் இருப்பது, கடும் கண்டனத்துக்கு உரியது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.