பொது பாடத்திட்டம்: ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை: தமிழக அரசின் உயர்கல்விக்கான பொது பாடத்திட்டத்தை ரத்து செய்ய கோரி, கல்லுாரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு தொடர் போராட்டம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பொதுவான பாடத்திட்டத்தை, உயர்கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடத்திட்டத்தின், 75 சதவீத அம்சங்களை, ஒவ்வொரு பல்கலையும், தங்களின் பாடத்திட்டத்தில் பின்பற்ற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பல்கலைகள் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யு.ஜி.சி., விதிகளுக்கு முரணாக, பொது பாடத்திட்டம் அமைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். பொது பாடத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கல்லுாரி ஆசிரியர்களுக்கான கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, அந்த குழு வெளியிட்ட அறிக்கை:பொது பாடத்திட்டம், யு.ஜி.சி., வழங்கியுள்ள தன்னாட்சி அந்தஸ்தை பறிப்பதாக உள்ளது. எந்த ஒரு பாடத்திட்டமும் அவ்வப்போது, புதுப்பிக்கப்பட வேண்டும். பொது பாடத்திட்டம் தயாரித்த உயர்கல்வி மன்றத்தால், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை புதுப்பிக்க முடியுமா? அப்படியிருந்தால், 13 பல்கலைகளில் பாடத்திட்டத்தை கவனிக்கும், 500 கல்விக்குழுக்களின் நிலை என்ன? உலகின் மிகவும் முன்னேறிய நாடுகளில் கூட, பொதுவான பாடத்திட்டம் கிடையாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் பொதுவான பாடத்திட்டத்தில் இருப்பதை கற்பனை கூட செய்ய முடியாது. பொது பாடத்திட்டம் தொடர்பாக தமிழக உயர்கல்வி மன்றம் கருத்துகள் கேட்டதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. எனவே, பொது பாடத்திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.