சம வேலைக்கு சம ஊதியம்!
சென்னை: சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரி, தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் இயக்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலர் ராபர்ட் அறிக்கை:அரசு பள்ளிகளில், 2009 ஜூன் 1க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் 8,370 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஒரு நாளுக்கு பின் அதாவது, 2009ம் ஆண்டு ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 5,200 ரூபாய். ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி, ஒரே பதவி என்ற நிலையில், இந்த ஊதிய வேறுபாட்டை போக்கி, சம ஊதியம் வழங்க வேண்டும்.எங்கள் கோரிக்கை குறித்து முடிவு செய்ய, மூன்று நபர் உள்ள ஆய்வுக் குழு அமைத்து, ஜனவரியில் அரசு உத்தரவிட்டது. ஆனால், அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, ஊதியக்குழு அறிக்கையை விரைந்து தாக்கல் செய்யவும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், மீண்டும் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். ஆகஸ்ட் முதல் வாரத்தில், போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும்.செப்., 5ல் ஆசிரியர் தினத்தில் இருந்து, 27 வரை, கோரிக்கை அட்டை அணிந்து, பள்ளி செல்லும் போராட்டம் நடத்தப்படும். இதற்கு பின்னும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், செப்டம்பரில் காலாண்டு விடுமுறையில், காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.