ஆங்கில பள்ளிகள் அமைக்க வலியுறுத்தல்
பெங்களூரு: நகர பகுதிகளை போன்று, கிராமங்களில் ஆங்கில வழி பள்ளிகள் திறக்க வேண்டும், என அரசிகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கேகவுடா சட்டசபையில் வலியுறுத்தினார்.பட்ஜெட் மீது சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:காங்., - சிவலிங்கே கவுடா: ஆங்கில வழியில் கல்வி கற்றால், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். இதற்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டும். நகர பகுதிகளில் தேவையான ஆங்கில வழி பள்ளிகள் உள்ளன. ஆனால், கிராமங்களில் இல்லை. ஐந்து வாக்குறுதிகளுடன், ஆங்கில பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்க வேண்டும். பா.ஜ., ஆட்சி காலத்தில் கர்நாடகாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.அயலக முதலீடு குறைந்தது. பொதுப்பணி, நீர்ப்பாசனம் உட்பட முக்கியமான துறைகளில் 49 ஆயிரத்து 116 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கு அவசர அவசரமாக டெண்டர் வழங்கப்பட்டது. காங்., பசவராஜ் ராயரெட்டி: பசவராஜ் பொம்மை மீது இருந்த எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. அவர் காலத்தில் பொருளாதாரம் சீராக இல்லை. எனவே அப்போதைய பொருளாதார நிலை குறித்து வெள்ளி அறிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.