லட்சத்தீவில் மாணவர்களுக்கு புதிய சீருடை
திருவனந்தபுரம்: லட்சத்தீவில், பள்ளி மாணவியர் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் வகையில், புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நம் நாட்டில் உள்ள லட்சத்தீவு யூனியன் பிரதேசம், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதை நிர்வகிக்க, நிர்வாக அதிகாரி ஒருவர் உள்ளார். சமீபத்தில், லட்சத்தீவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, அதன் நிர்வாகம் புதிய சீருடையை அறிமுகப்படுத்தியது. இந்த சீருடைகளை தவிர, வேறு எந்த ஆடைகளையும் மாணவ - மாணவியர் அணியக் கூடாது என்றும், இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் லட்சத்தீவு நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, லட்சத்தீவு காங்., தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான ஹம்துல்லா சயீத் நேற்று கூறியதாவது:மத்திய பா.ஜ., அரசும், லட்சத்தீவு நிர்வாகமும், எங்களது கலாசாரம் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரான, மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்த முயற்சித்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடை அறிவிப்பை, எந்த வகையிலும் ஏற்க முடியாது. மாணவியர் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் வகையில், நிர்வாகத்தின் அறிவிப்பு உள்ளது. இதற்கு எதிராக, நாங்கள் தொடர்ந்து போராடுவோம். வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்வர். மேலும், லட்சத்தீவில் மதுக்கடைகளை அனுமதிக்கும் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.