உள்ளூர் செய்திகள்

எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு!

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.இ., உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுகளுக்கு, நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நுழைவுத்தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்ப படிப்பு கிடைப்பதை தடை செய்கிறது என்ற காரணம் காட்டி, தமிழகத்தில் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களின் வசதிக்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், மழலையே மாறாத, ஆனா, ஆவன்னா, ‘ஏ,பி,சி,டி’ கூட சொல்லத் தெரியாத பிஞ்சுக் குழந்தைகளை வாட்டி வதைக்கும் வகையில், மெட்ரிக்., மற்றும் சில தனியார் பள்ளிகளில், அவர்களை நுழைவுத் தேர்வு எழுத வைக்கும் கொடூர அவலம்  அரங்கேறி வருகிறது. முன்னணி தனியார் பள்ளிகளில் மட்டுமே இருந்து வந்த நுழைவுத் தேர்வு தற்போது, பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில் பரவி விட்டது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, ‘அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி மறுக்கப்படாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் உரிமை சட்டத்தில் நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது’ என அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது சட்டப்படி தவறான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் குழந்தைகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடவடிக்கையே மே மற்றும் ஜூன் மாதத்தில் தான் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளை அரசு விதித்திருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்ட தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், சட்டத்துக்கு புறம்பான நுழைவுத்தேர்வு நடத்தும் முறைகளையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தீர்வு கிடைக்கும் என  பெற்றோர் கருத்து தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, மாணவ, மாணவியரின் பெற்றோரில் சிலர் கூறியதாவது:பெற்றோர் படித்திருந்தால் மட்டுமே குழந்தைக்கு அட்மிஷன், குழந்தைகள் நுழைவுத் தேர்வில் தேர்வானால் மட்டுமே அட்மிஷன் என ஏராளமான விதிமுறைகளை உருவாக்கி, பள்ளி உரிமையாளர்கள், தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சிறுபான்மையின பள்ளிகளில் இவ்விதிமீறல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. விதிமுறை மீறும் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், தனி சட்டம் அல்லது அமைப்பு உருவாக்கினால் மட்டுமே, குழந்தைகளின் நலனை காக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்