தனித்துவ அடையாளமாக மாறும் பெண்கள்
பெண்கள் அறிவை வளர்த்தால், இந்த வையகம் பேதைமை அற்றிடும் காணீர் என பாடினான் தீர்க்கதரிசி கவிஞன் பாரதி. பெண்கள், பல துறைகளிலும் கோலோச்சுவர் என்பதை, தான் வாழ்ந்த காலத்திலேயே பாடி வைத்தான் பாரதி.அதற்கேற்ப, பெண்கள் நுழையாத துறையே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதுவும், நீதித்துறையில், பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. வக்கீல்களாக, நீதிபதிகளாக சட்டத்தை நிலை நாட்டுவதில், கெட்டிக்காரர்களாக திகழ்கின்றனர்.சர்வதேச பெண்கள் தினம் மற்றும் பெண் நீதிபதிகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட் வக்கீல் நப்பிணை, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், மகளிர் தினம், பெண்களுக்கானது மட்டுமல்ல; அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும், ஆண்களுக்கானதும் தான். முதலில், ஆண், பெண் என்ற பாலின பாகுபாடே இருக்கக்கூடாது.பெண்கள், அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தாங்கள் பணியாற்றும் துறையின் தன்மையை புரிந்து, அடுத்த நிலைக்கு உயர வேண்டும். நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகளவில் காணப்படுகிறது. வழக்கறிஞர், நீதிபதிகளாக பல சவாலான வழக்குகளை கூட சாமார்த்தியமாக கையாள்கின்றனர்,&'&' என்றார்.முன்னதாக, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி சுவர்ணம் நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், பெண்கள் ஒவ்வொருவரும், இந்த சமுதாயத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி, பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்கும், பக்கபலமாக இருப்பது பெண்கள் தான் என்றார்.நிகழ்ச்சியில், மோட்டார் வாகன நீதிமன்ற மாவட்ட நீதிபதி பாலு, குடும்ப நல நீதிபதி சுகந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் பழனிசாமி, ரகுபதி, கலாநிதி ஆகியோர், பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினர்.முன்னதாக, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா வரவேற்றார். நீதித்துறை நடுவர் பாரதிபிரபா நன்றி கூறினார்.