ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அபார வளர்ச்சி
புதுடில்லி: நம் நாட்டிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் வரிசையில், நான்காவது இடத்தை பிடித்துள்ளது, ஸ்மார்ட்போன்கள்.முன்பு ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக, தற்போது நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.கடந்த 2023 - 24 நிதியாண்டில், ஸ்மார்ட்போன் ஏற்றுமதி, 42 சதவீதம் உயர்ந்து, கிட்டத்தட்ட 1.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதில், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மட்டும், 158 சதவீதம் வளர்ச்சி கண்டது.இந்த வளர்ச்சிக்கு, அரசின் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இத்திட்டத்தால், சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய போன் தயாரிப்பாளராக மாறி உள்ளது. புவிசார் அரசியல் காரணங்களால் ஏற்படும் தயாரிப்பு மற்றும் வினியோக தொடர் பிரச்னைகளை தவிர்க்க, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை சீனாவில் மேற்கொள்வதற்கு பதில், இந்தியாவில் மேற்கொள்ள இத்திட்டம் உதவியுள்ளது.