பாரதியார் பல்கலையில் அதிகரிக்கும் முறைகேடுகள்
கோவை: பாரதியார் பல்கலையில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.பாரதியார் பல்கலையில், 2022 அக்., முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாகவுள்ளது. பல்கலை சிண்டிகேட் தரப்பில் மூன்று பேர் கொண்ட துணைவேந்தர் தேடல் குழு நியமித்து, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.ஆனால், நீண்ட இழுபறிக்குப் பின் கவர்னர், பல்கலை தரப்பில் வழங்கப்பட்ட தேடல் குழுவில், நான்காம் நபராக யு.ஜி.சி., நாமினி ஒருவரை சேர்த்து, நான்கு பேர் கொண்ட தேடல் குழு, கடந்த 2023 செப்., மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாநில அரசு, பல்கலை சிண்டிகேட் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.சட்டநடைமுறைகளின் படி, பல்கலை சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, மாநில அரசின் அரசிதழில் வெளியிட்டால் மட்டுமே, தேடல் குழுவில் மாற்றங்கள் கொண்டுவர இயலும் என்பதை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது.இதைத் தொடர்ந்து பாரதியார் பல்கலை உட்பட மூன்று பல்கலைகளுக்கு கவர்னர் அறிவித்து இருந்த, நான்கு பேர் கொண்ட தேடல் குழு, கடந்த., ஜன., மாதம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், அதன்பின் புதிய துணைவேந்தர் தேடல் குழு நியமிப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேற்கு மண்டலத்தில் முக்கிய பல்கலைகளில் ஒன்றான பாரதியார் பல்கலையில், துணைவேந்தர் நியமிக்கப்படாததால், பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.பல்கலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், பல்கலையில் துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாததால், பல்வேறு தரப்பினரும் தங்கள் இஷ்டத்துக்கு பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களை கேள்வி கேட்கவும் முடியவில்லை. பொறுப்பு பணிகளில் இருப்பவர்களும் தங்களது பணி முடிந்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். அவர்கள் தவறு செய்பவர்களை கேள்வி கேட்பதும் இல்லை. இதன் காரணமாக பழம்பெருமை வாய்ந்த பாரதியார் பல்கலையின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கிறது. பல்கலையின் பல்வேறு துறைகளில் மாணவர்களின் நலன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளிலும் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன.பாடத்திட்டம் வரையறை செய்வது, தேர்ச்சி விகிதம், பேராசிரியர்கள் நியமனம் என, அனைத்திலும், பல்கலை பின்னடைவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல்கலையின் தரம் சரிந்து வருகிறது. அரசு பல்கலையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு துணைவேந்தரை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.