தங்கவயல் தமிழருக்கு ராஜ்யோத்சவா விருது
தங்கவயல்: தமிழை தாய்மொழியாக கொண்டு படித்து, கன்னட இலக்கியத்துக்கு சேவையாற்றி வரும் புகழேந்தி என்பவருக்கு, தாலுகா அளவிலான ராஜ்யோத்சவா விருது வழங்கப்பட்டுள்ளது.முனைவர் பட்டம்தங்கவயல், மாரிகுப்பம் சைனாட் லைன் வட்டாரத்தில் பிறந்தவர் புகழேந்தி, 63; தமிழில் படித்தவர். மைசூரு பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். 2010 நாளந்தா பல்கலைக் கழகத்தில் இலக்கியத்திற்காக முனைவர் பட்டம் பெற்றார்.கர்நாடகாவில் கன்னடமும் அவசியமானது என்பதை அறிந்து, சுயமாக கன்னட அரிச்சுவடி புத்தகம் வாங்கி, எழுதி, படிக்க துவக்கினார்.கல்லுாரி படிப்புடன், விருப்ப பாடமாக கன்னடத்தை கற்றறிந்து, கன்னட கவிஞர் ஆனார். 25 ஆண்டுகளாக கன்னட இலக்கியத்துக்கு சேவை புரிந்து வருகிறார். தற்போது, பல்லாரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்.கடந்த 1ம் தேதி, பல்லாரி மாவட்டம் சிறுகுப்பா தாலுகா நிர்வாகம், மற்றும் சிறுகுப்பா கன்னட சாகித்ய பரிஷத் இணைந்து நடத்திய 69-வது கன்னட ராஜ்யோத்சவா விழாவில், கன்னட இலக்கியத்தின் வளர்ச்சிக்காக புகழேந்தி அளித்து வரும் பங்களிப்பையும் சாதனைகளையும் பாராட்டி, தாலுகா அளவிலான ராஜ்யோத்சவா சிறப்பு விருதை வழங்கி சிறப்பித்தது.ஓய்வு பெற்றவர்தாசில்தார் மற்றும் தாலுகா கன்னட சாகித்ய பரிஷத்தின் தலைவர் டாக்டர் மதுசூதன் காரிகனுார், கல்வி அதிகாரி குர்ரப்பா, மருத்துவ அதிகாரி டாக்டர் ஈரண்ணா, நகராட்சி ஆணையர் குருபிரசாத், கலால் ஆய்வாளர் கீர்த்தனா ஆகியோர் முன்னிலையில் இவ்விருது வழங்கப்பட்டது.புகழேந்தி, மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்.