உள்ளூர் செய்திகள்

பார்வையற்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் மாற்றுத்திறனாளி

பெங்களூரு: விஷன் எம்பவர் நிறுவனத்தின் இணை நிறுவனரான பார்வையற்ற இளம் பெண், தன்னை போலவே பார்வையற்ற குழந்தைகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான பாடங்களில் பிரெய்லி மூலம் உதவி வருகிறார்.பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள திருமகொண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தர் வித்யா, 29. பிறவிலேயே கண் பார்வை இல்லாதவர். ஏழாம் வகுப்பு வரை பெங்களூரில் பார்வையற்றோர் பள்ளியில் படித்து வந்தார்.ஏழாம் வகுப்புக்கு பின், வழக்கமான மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் அது அவ்வளவு சுலபமாக அவருக்கு அமையவில்லை. மற்ற மாணவர்கள் போன்று கரும் பலகையில் எழுதப்படும் குறிப்புகள் அல்லது வரைபடங்கள் அவருக்கு தெரியவில்லை.தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போதெல்லாம், கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதன் பின் அவரது பெற்றோர், தனியாக ஆசிரியரை நியமித்து, அவருக்கு சொல்லித்தர ஏற்பாடு செய்தனர். இதன் மூலம் எஸ்.எஸ்.எல்.சி.,யில் அதிக மதிப்பெண் எடுத்ததுடன், மாநிலம் முழுதும் அறியப்பட்டார்.பள்ளியை முடித்த அவர், பி.யு.சி., வணிகத்துடன் கணிதம் தேர்ந்தெடுத்தார். அதன்பின், கம்ப்யூட்டர் சயின்சில் படப்படிப்பு முடித்தார். கம்ப்யூட்டர் சயின்சும் கூட, அவருக்கு அவ்வளவு சுலபமாக வந்துவிடவில்லை.இதை படிக்க வேண்டும் என்றால், பல கணித வழக்குகள், புரோக்ராம்கள், வரைபடங்கள், ஆய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக ஆன்லைனில் பாடம் சொல்லித்தருவதாக அறிந்த, கனடாவை சேர்ந்தவர்களுடன் ஜூம் வலைதளம் மூலம் உதவி பெற்றார்.அதன்பின், இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் முதுகலை பட்டம் பெற்று, 2017ல் தங்கப்பதக்கம் வாங்கினார்.அதன்பின்னரும் அவரது போராட்டம் நிற்கவில்லை. கல்லுாரியில் படிக்கும் போது, மைக்ரோசாப்ட்டில் பயிற்சி பெற்றார். பார்வையற்றவர் என்ற ஒரே காரணத்தால், அவருக்கு பணி வழங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.அப்போது தான், தானே ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தார். அறிவியல் பாடம் படிக்கும் போது, அவர் பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வந்தன. என்னை போன்று பார்வையற்ற குழந்தைகளுக்கும், அறிவியலை சிரமமின்றி கற்க, உதவ விரும்பினார்.பார்வையற்ற மாணவர்கள், அறிவியல் பாடங்களில் திறமையாக கற்றுக்கொள்ள, அதற்கான பாடத்திட்டம் இல்லை. எனவே, 2017 ல், ஐ.ஐ.டி.,யில் தனது பேராசிரியரான அமித் பிரகாஷ், இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி மாணவியான சுப்ரியா டே ஆகியோருடன் இணைந்து 'விஷன் எம்பவர்' நிறுவனத்தை தொடங்கினார்.இந்நிறுவனம் லாப நோக்கமற்ற அமைப்பாகும். இது எஸ்.டி.இ.எம்., எனும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித பாடங்கள், கணக்கீட்டு அறிந்து கொள்வதற்காக, உருவாக்கினார்.ஆரம்பத்தில் இத்திட்டத்தை 4ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக உருவாக்கினார். இதற்கு வரவேற்பு அதிகரித்ததால், 1ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர்.எஸ்.டி.இ.எம்., சார்பில் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் தொடர்பான புத்தகங்கள் பிரெய்லி மூலம் வழங்கப்படுகின்றன. வழக்கமான பிரெய்லி புத்தகமாக இல்லாமல், அறிவியலை அறிந்து கொள்ளும் வகையில், வரைபடங்களை 2டி மூலம் வழங்குகின்றனர். இதன் மூலம் இந்த வரைபடங்களை தொட்டு படித்து தெரிந்து கொள்வர்.தற்போது புதிய முயற்சியாக, புதிய கருத்துகள், புதுமையான கருவிகளை கற்றுக்கொள்வதற்கான ஆசிரியர் பயிற்சி திட்டமாகும். டிஜிட்டல் கல்வி அறிவு திட்டத்துக்காக, அவர்கள் வெவ்வேறு விளையாட்டு அடிப்படையிலான முறைகளை பயன்படுத்தி, குழந்தைகளுக்கு கற்பிக்க, சொந்த கருவிகளை உருவாக்கி உள்ளனர்.உலகம் முழுதும் கொரோனா தொற்று துவங்கியது முதல், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித்தர துவக்கினார். விஷன் எம்பவரில், வேம்பி டெக்னாலஜி தொழில்நுட்ப பிரிவு உள்ளது. இப்பிரிவு, சுபோதா என்ற கற்றல் மேலாண்மை அமைப்பை உருவாக்கி உள்ளனர். அவர்கள் பார்வை குறைபாடு உள்ள ஆசிரியர்கள், குழந்தைகள் அணுகக்கூடிய பொருட்களை உருவாக்கி வருகின்றனர்.அத்துடன் குழந்தைகளுக்கென குறைந்த விலையில் ஹெக்சஸ் - அன்டாரா என்ற பிரெய்லி புத்தக 'ரீடரை' வடிவமைத்து உள்ளனர். தற்போது, கர்நாடகா, தமிழகம், கேரளா, திரிபுரா, புதுடில்லி, குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள 80 பள்ளிகளுடன் இணைந்து செயல்படுகிறது. நுாற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் உதவியுடன், 1,800க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.இந்நிறுவனத்துக்கு மைக்ரோசாப்ட், விப்ரோ, எலக்ட்ரோபிட் இந்தியா, காக்னிசன்ட் உட்பட பல கார்ப்ரேட் நிறுவனங்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்