விருதுநகர் அரசு அருங்காட்சியகம் திறப்பு
விருதுநகர்: விருதுநகரில் ரூ.12.43 கோடிக்கு அரசு அருங்காட்சியகம் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி, பார்வையிட்டனர். டி.ஆர்.ஓ., ஆனந்தி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், அசோகன் முன்னிலை வகித்தனர். தரை தளத்தில் அறிமுகக் காட்சி கூடம், மாவட்ட முக்கிய தலைவர்கள் விவரங்கள், இயற்கை வரலாறு, தொல்லியல், சமூக பண்பாட்டு வரலாற்றுக் காட்சிக்கூடங்கள் உள்ளன.முதல் தளத்தில் அலுவலக அறைகள், காப்பாட்சியர் அறை, சிறப்பு கண்காட்சி அறை, நவீன ஏ.வி., கூட்டரங்கமும், 2ம் தளத்தில் அரிய பொருட்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான வைப்பு அறையுடன், வளாகத்தில் தனித்தனியான கழிவறை வசதிகள், சிற்றுண்டி உணவகமும் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு தொல்லியல் சான்றுகளான பூர்ணச்சந்திராபுரம், ஆலமரத்துப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட நுண்கற்காலக் கருவிகள், முத்தார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட ஊர்களில் கிடைத்த முழுமையான முதுமக்கள் தாழிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளான சாத்துார் நென்மேனி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, கி.பி. 823ம் ஆண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்துக் கல்வெட்டு இங்குள்ளவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.இது பண்டைய நீர்ப்பாசன முறையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. மக்கள், மாணவர்கள் மாவட்டத்தின் வரலாறு, இயற்கையை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் சிறந்த கல்வி மையமாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியக காப்பாட்சியர் பால்துரை, நகராட்சி தலைவர் மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.