விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.2026 - 27க்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் 17 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று தேசிய, மாநில விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று கல்லூரிகளில் சேரும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர்க்கப்படுவர். கல்லூரி படிப்பின் போது சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்று முதுநிலை படிப்பு முதலாம் ஆண்டு சேருபவர்களும் விண்ணப்பிக்கலாம்.சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்புபவர்களுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் மார்ச் 30 காலை 07:00 மணிக்கு நடக்கிறது.ஆடவர், மகளிர் தடகளம், பளுதூக்குதல், ஜூடோ, வாள்சண்டை, வாலிபால், ஆடவர் கால்பந்து தேர்வு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடக்கிறது. ஆடவர், மகளிர் கூடைபந்து, குத்துச்சண்டை, ஹேண்ட்பால், மகளிர் கால்பந்து போட்டிகள் நேரு உள் விளையாட்டரங்கிலும், ஆடவர், மகளிர் ஹாக்கி, கபடி போட்டிகள் சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கிறது.தேர்வு பெறுபவர்களுக்கு அறிவியல் சார்ந்த விளையாட்டு, சத்தான உணவு வசதியுடன் தங்குமிடம் வழங்கப்படுகிறது.www.sdat.tn.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டும் மார்ச் 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைபேசி 95140 00777ல் தொடர்பு கொள்ளலாம்.