உள்ளூர் செய்திகள்

சென்னையில் இந்திய அறிவியல் மாநாடு

சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், 98 வது இந்திய அறிவியல் மாநாடு இன்று(திங்கள்கிழமை) தொடங்குகிறது. வரும் 7 ஆம் தேதி வரை நடக்கும் இம்மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் தொடக்கி வைக்கிறார். கடந்த 1914 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அறிவியல் மாநாடு, எந்தவித தங்குதடையுமின்றி நடந்து வருகிறது. இந்த மாநாடானது சென்னையில் நடக்கும் 7வது மாநாடாகும். முதல் அறிவியல் மாநாடு, கல்கத்தாவிலுள்ள ஆசியாடிக் சொசைட்டியில் நடந்தது. அதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 150 விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். சென்னையில் நடக்கும் இந்த 98 வது மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்தும் 7500 விஞ்ஞானிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் நோபல்பரிசு பெற்ற 6 விஞ்ஞானிகளும் அடக்கம். அந்த நோபல் விஞ்ஞானிகள் இந்த மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்தவிருக்கிறார்கள். இந்த விஞ்ஞானிகளில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், நாளை(செவ்வாய்க்கிழமை) குழந்தைகள் அறிவியல் மாநாட்டையும் துவக்கிவைக்கிறார். இந்த மாநாட்டில் 1300 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும் இளம் விஞ்ஞானிகள், 14 பிரிவுகளில் விருதுகளுக்காக போட்டியிடுகிறார்கள். இதுத்தவிர இம்மாநாட்டில் 27 புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் மற்றும் தொழில்துறை வல்லுனர்களுக்காக ஐ.எஸ்.சி.ஏ. விருதுகள் வழங்கப்படுகின்றன. இம்மாநாட்டிற்கு இன்று தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்