உள்ளூர் செய்திகள்

‘சட்டநூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்’

மதுரை: “ ஜப்பான், ஜெர்மன், சீனநாடுகளில் தாய்மொழி மூலம் மக்கள் வெற்றி பெறுகின்றனர்,” என, மதுரை செந்தமிழ்க் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி (ஓய்வு) லட்சுமணன் தெரிவித்தார். கல்லூரி 54 வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் விஜயன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் குருசாமி தலைமை வகித்தார். தமிழ்ச்சங்க செயலாளர் அழகுமலை முன்னிலை வகித்தார். நீதிபதி லட்சுமணன் பேசியதாவது: தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் நமது நாட்டு அறிஞர்கள், பிறநாட்டு அறிஞர்களும் தமிழின் சிறப்பை உணர்ந்து செம்மொழியாக போற்றியுள்ளனர். தமிழ்மொழியின் அழகு, சிறப்பை உணர்ந்து ‘உயர்தனிச் செம்மொழி’ என பாராட்டிய பெருமை, பரிதிமாற்கலைஞரையேச் சேரும். செம்மொழியாக இருப்பதற்கு நான்கு கூறுகள் தேவை. 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையாகவும், பழைய இலக்கிய வளம் சங்கிலித் தொடர் போன்றும், வேறு மொழியின் துணையின்றி நிற்கும் தனித்தன்மையும், நவீன இலக்கியத்திலிருந்து வேறுபட்டு நிற்பது ஆகிய கூறுகளே செம்மொழி அந்தஸ்தை வழங்குகிறது. இந்த அளவுகோல் தமிழ்மொழியை முன்னுதாரணமாகக் கொண்டு அளவிடப்பட்டது. அந்தளவிற்கு சிறப்புடையது தமிழ்மொழி. சீனா, ஜப்பான், ஜெர்மனியில் தாய்மொழியிலேயே மக்கள் பாடம் கற்கின்றனர், வளர்ச்சி பெறுகின்றனர். தமிழும் அதுபோல தழைத்தோங்க வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள சட்டநூல்களை தமிழில் மொழிபெயர்த்து பாடமாக்க வேண்டும். இதற்காக சட்டமொழி ஆணையம் நிறைவேற்ற வேண்டும். இதுநிறைவேற சில காலம் ஆகும். பட்டம் என்பது ஒரு பணியைச் செய்வதற்கான தகுதிச் சீட்டல்ல. முழுமனிதர்களாக உருவாக்கியதற்கான வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ், என்றார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்