ஆங்கில புலமையில் மலேஷியா முதலிடம்
ஆசிய நாடுகளிலேயே ஆங்கிலத்தை தரமாகவும், சிறப்பாகவும் பேசக்கூடிய மக்களில் மலேஷிய நாட்டவர் முதலிடம் பெறுகின்றனர் என்று முக்கிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் அவர்கள் உலகளவில் 9 ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ஹாங்காங் இரண்டாம் இடத்தையும், தென் கொரியா மூன்றாம் இடத்தையும், ஜப்பான் நான்காம் இடத்தையும் பெறுகின்றன. அதேசமயம் இந்த அறிக்கையில், ஆசியாவில் ஆங்கிலத்தை, கல்வி, பொது சேவைகள் மற்றும் வணிகம் ஆகியவற்றில் அதிகளவு பயன்படுத்தும் இந்தியாவைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை. மேலும் மிகவும் உயர்தர ஆங்கிலம், ஓரளவு உயர்தர ஆங்கிலம், சுமாரான உயர்தர ஆங்கிலம், குறைந்தளவு உயர்தர ஆங்கிலம் மற்றும் மிகவும் குறைந்தளவு உயர்தர ஆங்கிலம் என்ற அளவீடுகளில் நாடுகள் வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த ஆய்வில், ஆங்கில அறிவானது, இலக்கணம், வார்த்தை வளம், படித்தல் மற்றும் கவனித்தல் ஆகிய பிரிவுகளில் மதிப்பிடப்பட்டது. உலகளவில், நாடுகளை, ஆங்கில புலமை என்ற அளவில் வகைப்படுத்தி வரிசைப்படுத்தியது இதுவே முதல்முறை. அதேசமயம் கணிதம் மற்றும் அறிவியலை ஆங்கிலத்தில் கற்றுக்கொடுப்பதா என்ற விவாதம் மலேஷியாவில் நடைபெற்றுவரும் அதேநேரத்தில், அந்த பாடங்கள் ஆங்கிலத்தில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சீனாவிலும், இந்தியாவிலும் உள்ளது.