உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் வழிகாட்டி நிகழ்ச்சி துவக்கம்

தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் இணைந்து நடத்தும், "வழிகாட்டி" கருத்தரங்கு, புதுச்சேரி முத்தியால்பேட்டை சுபலஷ்மி மகாலில் இன்று (8ம் தேதி) துவங்கி 10ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. தேர்வு எழுதி முடித்து அடுத்து மேற்படிப்பில் சேர காத்திருக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கும், அவர்களின் பெற்றோருக்கும் வழிகாட்டும் வகையில், "எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம்" என்பது குறித்து வழிகாட்டுவதற்காக பல ஆண்டுகளாக, இக்கருத்தரங்கு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான, "வழிகாட்டி" கருத்தரங்கு, புதுச்சேரி முத்தியால்பேட்டை சுபலஷ்மி மகாலில் இன்று காலை 10 மணிக்கு துவங்குகிறது. காலை, மாலை என இரு வேளையும் நடக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட பல்துறை கல்வி வல்லுனர்கள் ஒரே இடத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களின் உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்து, சிறந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர்.கருத்தரங்கு காலை 10 மணி முதல் 11.30 வரையும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையும் நடக்கிறது. முதல் நாளான இன்று நடக்கும் கருத்தரங்கில் "எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகள்" என்ற தலைப்பில், மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., அகடமியை சேர்ந்த ராஜராஜன் வழங்கும் ஆலோசனைகள், கம்ப்யூட்டர் சயின்சில் எதிர்காலம் என்ற தலைப்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கோவிந்தராஜன், ஆலோசனைகள் வழங்குகின்றனர். வளமான வேலைவாய்ப்புகளை வழங்கும் பயோடெக் மற்றும் பயோ இன்ஜினியரிங் என்ற தலைப்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பேராசிரியர் முகமது அலி ஆலோசனை வழங்குகிறார். இதேபோல், கம்ப்யூட்டர் ஐ.டி., துறையின் தற்போதைய போக்குகள் என்ற தலைப்பில் டி.சி.எஸ்., நிறுவன அதிகாரி சுமந்த் ராமன், ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் குறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஷைலஜா பேசுகின்றனர். அத்துடன், உயர் கல்வி குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கும், வல்லுனர்கள் நேரடியாக பதில் அளிக்கின்றனர்.வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, எந்த கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது என்ற முழுமையான வழகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படும். கருத்தரங்கில் ஒரே கூரையின் கீழ், 50 கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருத்தரங்கத்தில், அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை எல்லாம் உண்டு. அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை காலை 10.30 மணியிலிருந்து இரவு 7 மணி வரை பார்வையிடலாம். பிளஸ் 2 மாணவ, மாணவியரின் வழிகாட்டுதலுக்காக நடக்கும் நிகழ்ச்சியை மாணவர்களும், பெற்றோரும் மிஸ் பண்ணிடாதீங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்