உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை இன்று முதல் விண்ணப்பம் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு, இன்று (மே 13) முதல் விண்ணப்ப விநியோகம் துவங்குகிறது.பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், வரும் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் 1 சேர்க்கைக்கு நாளை மறுநாள் 13 ம் தேதி பள்ளிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. வரும், 22,ம் தேதி மாலை 4:00 மணிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.வரும் 24ம் தேதி காலை 9:00 மணிக்கு அந்தந்த மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையில், 10ம் வகுப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் வெளியிடப்படும்.வரும் 27ம் தேதி மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு முறையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இடம் வழங்கப்படும். ஒவ்வொரு நாள் முடியும் போதும், மீதமுள்ள இடங்கள் ஒதுக்கீடு வாரியாக அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்.வரும் 28ம் தேதி 10ம் வகுப்பில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல் நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் வெளியிடப்படும். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இடம் வழங்கிய பின் மீதமுள்ள இடங்கள் அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளிகளில், உள்ள அறிவிப்பு பலகையில், 28ம் தேதி காலை 10:00 மணிக்கு ஒட்டப்படும்.வரும், 29ம் தேதி மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு முறையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இடம் வழங்கப்படும். வரும், 30ம் தேதி, 10ம் வகுப்பில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் வெளியிடப்படும்.மேலும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இடம் வழங்கிய பின், மீதமுள்ள இடங்கள் அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 30ம் தேதி காலை 10:00 மணிக்கு ஒட்டப்படும். வரும், 31ம் தேதி மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு முறையில், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இடம் வழங்கப்படும்.பிளஸ் 1 மாணவர்களின் வகுப்புகள், வரும் ஜூன் 6ம் தேதி முதல் துவங்கப்படும். அதனால், பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கை பெறுவதற்காக மாணவ, மாணவியர் தங்கள் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ் மற்றும் குடியுரிமை சான்றிதழ்களுடன், பெற்றோருடன் மேற்குறிப்பிட்ட சேர்க்கைக்கு வர வேண்டும்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்