விண்வெளி ஸ்டார்ட் அப்: ரூ.1,000 கோடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு கூட்டத்தில், விண்வெளித்துறையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க, 1,000 கோடி ரூபாய் துணிகர மூலதன நிதியத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் முயற்சியாக, பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு 2020ல் கொண்டு வந்தது. இதற்காக, இன்ஸ்பேஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.நிதி உதவிவிண்வெளித்துறையில் கால் பதிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 1,000 கோடி ரூபாய் துணிகர மூலதன நிதியம் ஒதுக்கப்படும் என, 2024 - 25க்கான பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதில், 40 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை துவங்கியதில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதியத்தில் இருந்து நிதி உதவிகள் அளிக்கப்படும். ஆண்டுக்கு, 150 முதல் 250 கோடி ரூபாய் வரை முதலீடுகள் செய்யப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.வரும், 2025 - 26 நிதியாண்டில் மட்டும், 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்க அரசு முடிவு செய்துஉள்ளது. தற்போது, 70,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ள இந்திய விண்வெளி பொருளாதாரத்தை 2033ல் 3.65 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஆந்திராவின் அமராவதி ரயில் வழித்தட பணிகளுக்கு 2,245 கோடி ரூபாய் நிதி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.நேரடி ரயில் பயணம்இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இத்திட்டத்தில், ஆந்திராவின் ஏற்றுப்பாலத்தில் இருந்து அமராவதி வழியாக நம்புரு வரையில் 57 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால், அமராவதி, மசிலிப்பட்டணம் துறைமுகம், கிருஷ்ணபட்டணம் துறைமுகம், காக்கிநாடா துறைமுகம் இடையே ரயில் போக்குவரத்து மேம்படும். மேலும், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, நாக்பூர், கோல்கட்டா நகரங்களுடன் அமராவதிக்கான நேரடி ரயில் பயணம் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.