உள்ளூர் செய்திகள்

பள்ளியில் மாயமான சிறுமி: 13 ஆண்டுகளுக்கு பின் போலீசை அழைத்ததால் அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிக்கு சென்று மாயமான சிறுமி, தற்போது தொலைபேசியில் அழைத்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசித்து வந்த ஜெசிகா டெல்காடிலோ என்ற மாணவி 14 வயதாக இருக்கும் போது, பள்ளி சென்று விட்டு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அந்த வழக்கை போலீசார் கிடப்பில் போட்டனர்.ஆனால் கடந்த ஆண்டு காணாமல் போன முக்கிய 3 வழக்குகளை போலீசார் மீண்டும் தூசி தட்டினர். அதில் ஜெசிகாவின் வழக்கும் ஒன்று. இதற்காக காணாமல் போன குழந்தைகளுக்கான தேசிய மையத்தை நாடினர். வழக்கை ஆராய்ந்து அது தொடர்பான தகவல்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.இதன் பலனாக கடந்த நவ., மாதம் போலீசுக்கு அழைப்பு வந்தது. அதில், காணாமல் போன ஜெசிகா டெகால்டிலோ பேசுவதாக கூறினார். சிறுமியாக மாயமாகி இளம்பெண்ணாக மாறியுள்ள ஜெசிகா, வீட்டில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள பகுதி ஒன்றில் வசித்து வந்தது தெரியவந்தது. அவரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ததில், காணாமல் போன ஜெசிகா என்பது உறுதியானது. காணாமல் போனது முதல் தற்போது வரை என்ன நடந்தது என்பதை போலீசிடம் விளக்கிய ஜெசிகா, அது குறித்து வெளியில் தகவல் பரிமாற வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, இந்த விவகாரத்தில் போலீசார் ரகசியம் காத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்