உயர்கல்வி வழிகாட்டி முகாம்; 13 மாணவர்களுக்கு சேர்க்கை
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், உயர் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதும் இருந்து, 169 மாணவர்கள் பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அலுவலர்களிடம் தங்களது மனுக்களை அளித்தனர். அவர்களுக்கு அரங்கிலேயே உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதன்படி, கலெக்டர் மதுபாலன், அரசு தொழிற் பயிற்சி நிறுவனத்தில், 9 மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 4 பேர், என, 13 மாணவர்களுக்கு நேரடி சேர்க்கைக்கான ஆணை வழங்கினார். மேலும், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 24 மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் கிருஷ்ணவேணி, அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.