கைவினை திட்டத்துக்கு 18,000 பேர் விண்ணப்பம்
சென்னை: கைவினை கலைஞர்களுக்கு உதவ, கலைஞர் கைவினை திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நகை செய்தல், தையல், மர வேலை, சிற்பம் உள்ளிட்ட, 25 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்கள், தொழிலை மேம்படுத்த, 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.இதற்கு, 50,000 ரூபாய் வரை மானியமும், 5 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயன் பெற, குறைந்தபட்ச வயது 35. இத்திட்டத்திற்கு, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை ஆணையரக இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, கடந்த ஆண்டு டிச., 11ல் துவங்கியது.நேற்று மாலை வரை கடன் கேட்டு, 18,060 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களின் கடன் தொகைக்கு மானியம், 83 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். இதுவரை, 2,576 விண்ணப்பங்களுக்கு, தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.கைவினை திட்டத்துக்கு இந்தாண்டிற்கு அரசு, 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிகம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப மானியம் வழங்க, அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு, துறை அதிகாரிகளிடம் எழுந்து உள்ளது.