உள்நாட்டு தொழில்நுட்பத்தில் சந்திரயான்-2!
இத்தகவலை சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சந்திரயான்-1ன் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் முடிந்தாலும், அதில் இணைக்கப்பட்டிருந்த 11 கருவிகள் தொடர்ந்து சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, அடுத்த 2, 3 ஆண்டுகளுக்கு சந்திரன் தொடர்பான ஆராய்ச்சிகள் நடக்கும். சந்திரனில் தண்ணீர் இருப்பதை, இந்தியா அனுப்பிய சந்திரயான் விண்கலம்தான் முதலில் உறுதி செய்தது. வெளிநாட்டு விஞ்ஞானிகள் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். சந்திரனில் வேறு தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறியும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 425 கோடி ரூபாய் மதிப்பிலான சந்திரயான்-2ன் திட்டப் பணி முடிவடைந்து விட்டது. 99 சதவீதம் இந்திய தொழில் நுட்பம் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி சந்திரயான்-2 விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் வேறு நாடுகளின் கருவிகளை இணைக்கப் போவதில்லை. இந்த விண்கலம் 2012-2013ல் விண்ணில் ஏவப்படும். இதில் பொருத்தப்படவுள்ள இரண்டு கருவிகளில் ஒன்று, துருவப் பாதையை சுற்றி வரும். இரண்டாவது கருவி சந்திரனில் இறங்கி ஆராய்ச்சிகள் நடத்தும். இவ்வாறு, மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.