அமெரிக்க கல்விக் கண்காட்சி 2023
சென்னை: அமெரிக்க பல்கலைகள் மற்றும் கல்லூரிகள் கலந்துகொள்ளும் அமெரிக்க கல்விக் கண்காட்சி-2023 செப்., 2ம் தேதி சென்னையில் நடக்கிறது.அமெரிக்கா- இந்திய கல்வி அமைப்பின் (யு.எஸ்.ஐ.இ.எப்.,) அங்கமான எஜூகேஷன் யுஎஸ்ஏ, சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்துடன் இணைந்து செப் 2., பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கண்காட்சியை சென்னை, ஹோட்டல் ஹயாட் ரீஜன்ஸியில் நடத்துகிறது. அமெரிக்காவில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து அறிய ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சென்னையில் நடைபெறவுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழக கல்விக் கண்காட்சிக்கு வருகை தந்து அமெரிக்க பல்கலை பிரதிநிதிகளுடன் நேரில் கலந்துரையாடலாம்.அமெரிக்காவில் இளநிலை, முதுநிலை படிக்க விருப்பும் மாணவர்களுக்கு இந்த கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பங்கேற்க கட்டணம் இல்லை ஆனால் முன்பதிவு செய்வது அவசியம். மாணவர்கள், அமெரிக்க உயர்கல்வி பற்றிய தவல்களையும், விசா விண்ணப்ப செயல்முறையைப் பற்றியும் இக்கண்காட்சியில் அறிந்து கொள்ளலாம். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறுகையில், இந்திய மாணவர்களின் கனவுகளை அடைய உதவும் வாய்ப்பாக இந்த கண்காட்சி அமையும். உலகத்தரம் வாய்ந்த கல்வி, வெற்றிக்கான பாதையில் உங்களுக்கு வழிகாட்டுவதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது, என்றார்.அமெரிக்கா-இந்தியா கல்வி அமைப்பின் செயல் இயக்குனர் ஆடம் க்ரோட்ஸ்கி கூறுகையில், இந்திய மாணவர்கள் மிகவும் விரும்பித் தேர்ந்தெடுக்கும் மிகப்பிரபலமான சர்வதேச கல்வி மையமாக அமெரிக்கா திகழ்கிறது. அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தொடர்ந்து வழங்கி வருவதில் எஜூகேஷன் யுஎஸ்ஏ மகிழ்ச்சியடைகிறது, என்றார்.ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 3 வரை, இந்தியாவில் ஹைதராபாத், மும்பை, புனே, புதுடெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய எட்டு நகரங்களில் இந்தக் கண்காட்சி நடைபெறுகின்றன.