ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ்... 2,204 விண்ணப்பம்: வரும் 30ம் தேதி அட்மிஷன்
கோவை: கோவை வருவாய் மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ.) கீழ் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,204 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.மத்திய அரசு கட்டாயக் கல்வி உரிமை சட்ட நிதியை விடுவித்ததை தொடர்ந்து, தமிழக அரசு ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கை தொடர்பான, அறிவிப்பை வெளியிட்டது.தற்போதைய நுழைவு நிலை வகுப்புகளில், தனியார் சுயநிதி பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள், அதே பள்ளிகளில் புதிய கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பள்ளிகளில் தகுதியான மாணவர்களை ஆர்.டி.இ. ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், கோவை வருவாய் மாவட்டத்தில் செயல்படும் 335 தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில், மாணவர்களுக்கு இலவச இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.மாணவர் எண்ணிக்கை மற்றும் நுழைவு நிலை வகுப்பில், ஆர்.டி.இ., 25 சதவீத இடங்களை உறுதிப்படுத்தி, 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற வேண்டும். பள்ளிகள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது சரிபார்ப்பு நிலையில் உள்ளன.எல்.கே.ஜி. வகுப்பு இல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 1ம் வகுப்பு சேர்க்கை நடைபெறும்.ஆனால், கோவையில் செயல்படும் பெரும்பாலான பள்ளிகளில், முன்பருவ வகுப்புகள் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி.) உள்ளதால், 1ம் வகுப்பில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்பெரிதாக இல்லை என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாரிகள் மேலும் கூறுகையில், 'மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,204 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியான மாணவர்களின் ஆவணங்கள், பரிசீலனை செய்யப்பட்ட பின், வரும் 30ம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும்.ஒதுக்கீட்டை காட்டிலும் விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ள பள்ளிகளில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, சேர்க்கை வழங்கப்படும். இம்மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசே வழங்கும்' என தெரிவித்தனர்.