‘வேளாண்மை முறையை வலுப்படுத்த 25 ஆராய்ச்சி திட்டம்’
கோவை: “இந்தியாவில் வேளாண்மை முறையை வலுப்படுத்த 25 ஆராய்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகின்றன,” என, தேசிய வேளாண்மை முன்னோடி திட்ட ஒருங்கிணைப்பாளர் மிட்டல் பேசினார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கு தேசிய வேளாண்மை முன்னோடி திட்டத்தின் கீழ் ரூ.6.78 கோடி மதிப்பில் இரு ஆராய்ச்சி திட்டங்கள் கிடைத்துள்ளன. இத்திட்ட துவக்க விழா, வேளாண் பல்கலையில் ஆகஸ்ட் 27ம் தேதி நடந்தது. பல்கலை துணைவேந்தர் ராமசாமி திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், “மலரியல் சாகுபடிக்கான செலவை குறைத்து உற்பத்தியை பெருக்குவது, அறுவடைக்குப்பின் மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்பங்களை கண்டறிவது, சாகுபடியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிப்பது, மலர்களின் புள்ளிவிபரத் தொகுப்பை உருவாக்குவது, உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தை தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்டவை ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். இந்த ஆராய்ச்சியின் முடிவு, சமுதாயத்துக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்,” என்றார். தேசிய வேளாண்மை முன்னோடி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மிட்டல் பேசுகையில், “தேசிய வேளாண்மை முன்னோடி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 25 ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இரு ஆராய்ச்சி திட்டம், கோவை வேளாண் பல்கலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் உலக வங்கி மற்றும் பிற ஏஜன்சிகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி திட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கும். இதற்கென தனி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஆராய்ச்சித் திட்டம் வேளாண்மை முறையை வலுப்படுத்தும்; உற்பத்தியை அதிகரிக்கும். இத்திட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் இணைய முடியும்,” என்றார். வேளாண்மை பல்கலை தோட்டக்கலைத்துறை தலைவர் வடிவேல் பேசுகையில், “வேளாண்மைத் தொழிலில் வேலையாட்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. வேலையாட்களுக்கு கொடுக்கும் கூலி, விளைபொருட்களின் உற்பத்தியை விட அதிகரித்து விடுகிறது. இந்த ஆராய்ச்சி திட்ட முடிவில், பல நூறு ஏக்கர்களில் ஒரே வகையான பயிர்களை சாகுபடி செய்து விளைச்சல் பெற முடியும்,” என்றார். முன்னதாக வேளாண்மை பல்கலை மலரியல் துறை தலைவர் ஜவகர்லால் வரவேற்றார். முடிவில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மர இனப்பெருக்கவியல் துறை இணைப்பேராசிரியர் பார்த்திபன் நன்றி கூறினார். இந்த விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.