உள்ளூர் செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்க 28 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

சென்னை: அனைவருக்கும் ஐ.ஐ.டி., திட்டத்தின் கீழ், சென்னை, ஐ.ஐ.டி.,யில், 'பி.எஸ்., டேட்டா சயின்ஸ்' படிப்பில் சேர, 28 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை, ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, அரசு பள்ளி மாணவர்களுக்கும், பணி செய்வோருக்கும், ஐ.ஐ.டி., வாயிலாக தொழில்நுட்ப கல்வியை பரவலாக்கும் வகையில், இணைய வழியில் பல்வேறு படிப்புகளை அறிமுகம் செய்து வருகிறார்.அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், 'பி.எஸ்., டேட்டா சயின்ஸ்' எனும், தரவு அறிவியல் படிப்பு வழங்கப்படுகிறது.இதில் இந்த ஆண்டு சேர, சென்னை 6; கோவை 8; கள்ளக்குறிச்சி 3; மயிலாடுதுறை 1; சேலம், விழுப்புரம் தலா 2; சிவகங்கை, வேலுார் மாவட்டங்களில் தலா 3 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இதில், சிலர் தற்போது, பிளஸ் 2 படிக்கின்றனர். அவர்கள், அடுத்த ஆண்டு, இந்த படிப்பில் சேரலாம்.'பி.எஸ்., டேட்டா சயின்ஸ்' படிப்புக்கு தேர்வாகி உள்ள மாணவர்கள் கூறியதாவது:எங்கள் பெற்றோரின் ஆண்டு வருவாய், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவு என்பதால், இந்த படிப்புக்கான கட்டணத்தில், 75 சதவீதத்தை சென்னை ஐ.ஐ.டி., நிர்வாகமே செலுத்தும். மீதித் தொகையை, அரசு செலுத்தும்.இந்த வாய்ப்பு, பள்ளிக்கல்வித் துறை மற்றும் சென்னை ஐ.ஐ.டி., நேரடியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் கிடைத்தது. இதுபோல், மேலும், பல்வேறு வாய்ப்புகளை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அனைவருக்கும் ஐ.ஐ.டி., மெட்ராஸ் திட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன், திட்டம் குறித்து கூறுகையில், ''இத்திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு இல்லா மல், இளநிலை அறிவியல் பட்டப்படிப்பில் சேரலாம்.கல்லுாரி மாணவர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இது குறித்த தகவல்களை, study.iitm.ac.in/ds மற்றும் study.iitm.ac.in/es இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்''.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்