சந்திரயான் - 3 வெற்றிக்காக ஸ்ரோ சார்பில் சிறப்பு பூஜை
தட்சிண கன்னடா: சந்திரயான் - 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டி, பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியா கோவிலில் நேற்று காலை, இஸ்ரோ சார்பில் மஹாபூஜைகள் செய்யப்பட்டன.இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 என்ற விண்கலத்தை ஜூலை 14ம் தேதி வெற்றிகரமாக செலுத்தியது. முன்னதாக திருமலை வெங்கடேஸ்வரா கோவிலில், விண்கலத்தின் மாதிரிக்கு பூஜை செய்யப்பட்டு, வெற்றி அடைய வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் வேண்டினர். தற்போது நிலவை சுற்றி வரும், லேண்டர் சாதனத்தை, நாளை நிலவின் தென் துருவத்தில் இறக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுஉள்ளனர்.இந்நிலையில், நிலவில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி, தட்சிண கன்னடாவில் உள்ள பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியா கோவிலில் நேற்று காலை, இஸ்ரோ சார்பில் மஹாபூஜைகள் செய்யப்பட்டன. இதற்கிடையில், நிலவில் சந்திரயான் தரையிறங்கும் காட்சியை நேரலையில் பார்ப்பதற்காக, மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரா கோவிலில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு கல்லுாரிகளிலும், நாளை மாணவர்களுக்கு நேரலையில் திரையிட்டு காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.