உள்ளூர் செய்திகள்

போதை பொருள் விழிப்புணர்வு 3,397 மாணவர்கள் உலக சாதனை

ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், போதை இல்லா தமிழ்நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஏற்பாட்டில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, ஆவடி போலீஸ் கமிஷனரகம் மற்றும் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து, பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்ற உலக சாதனை நிகழ்ச்சி, ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.இந்நிகழ்ச்சியை, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தலைமை தாங்கினார்.இதில், சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளி கல்வித் துறை செயலர் குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 126 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3,397 மாணவ - மாணவியர் பங்கேற்று, எனக்கு வேண்டாம் போதை, நமக்கும் வேண்டாம் போதை என்ற வாசகம் போல் ஒருங்கிணைந்து நின்று, சங்கர் ஜிவால் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வு, ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.பின் பத்திரிகையாளர்களிடம் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக, அதிக அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருட்கள் சப்ளையை தடுக்க, போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.அதேபோல், ஐ.இ.சி., எனப்படும் தகவல், கல்வி மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் பள்ளி, கல்லுாரி, ஐ.டி., ஊழியர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.தென்மாநிலங்களைப் பொறுத்தவரை, தமிழகத்தில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது, போதைப்பொருள் புழக்கம் முன் இருந்ததை விட, குறைவாகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்