தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு 385.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
திருவாரூர்: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளுக்காக மத்திய கல்வி அமைச்சகம் 385.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.இந்த நிதியின் மூலம் புதிய வகுப்பறை கட்டடங்கள், நவீன கல்வி வளாகம், மாணவர் மற்றும் மாணவிகளுக்கான விடுதிகள், ஆராய்ச்சியாளர்கள் தங்கும் விடுதி, ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதிகள், அதிநவீன அறிவியல் உபகரண மையம், நிர்வாகக் கட்டட விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.குறிப்பாக, கல்விப் பிரிவுக்கான புதிய கட்டடத்துக்கு ரூ.96.40 கோடி, மாணவிகள் விடுதிக்காக ரூ.46.63 கோடி, மாணவர் விடுதிக்காக ரூ.46.91 கோடி, அறிவியல் உபகரண மையத்துக்காக ரூ.19.95 கோடி, அறிவியல் உபகரண கொள்முதலுக்காக ரூ.16.84 கோடி, நிர்வாகக் கட்டட விரிவாக்கத்துக்கு ரூ.46.16 கோடி, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புக்கு ரூ.62.97 கோடி, ஆராய்ச்சி மாணவர்களின் விடுதிக்காக ரூ.42.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த முதலீடுகள் பல்கலைக்கழகத்தில் கல்வி, ஆராய்ச்சி, குடியிருப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் தரமான கல்வி சூழலை வழங்கும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.