உள்ளூர் செய்திகள்

குரூப் - 4 கவுன்சிலிங் தேர்வர்கள், உறவினர்கள் அவதி

சென்னை: குரூப் - 4 கவுன்சிலிங் நேற்று துவங்கியது. போதுமான ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் முன் தேர்வர்கள் தவித்தனர்.அரசு துறைகளில் குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள, 10,292 இடங்களை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, கடந்த ஆண்டு ஜூலை 24ல் போட்டி தேர்வு நடந்தது. கடந்த மார்ச்சில் தேர்வு முடிவு வெளியானது. பணி நியமன கவுன்சிலிங், நேற்று துவங்கியது; ஆக., 10 வரை கவுன்சிலிங் நடக்கிறது. முதல் கட்டமாக, இரண்டு பணியிடங்களுக்கு மூன்று பேர் என்ற வீதத்தில், 8,500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.முதல் கட்டமாக, வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அதிகாரி பதவியில், 425 இடங்கள்; இளநிலை உதவியாளர், 5,321; வரி வசூலிப்பாளர், 69; கள உதவியாளர், 20 மற்றும் கிடங்கு காப்பாளர், 1 ஆகிய இடங்கள் நிரப்பப்படுகின்றன. நேற்றைய கவுன்சிலிங்கில் பங்கேற்க, பல மாவட்டங்களில் இருந்து தங்கள் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களுடன், தேர்வர்கள் சென்னை வந்தனர்.தேர்வர்கள் மட்டுமே, டி.என்.பி.எஸ்.சி., அலுவலக வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அதிகாரிகள், குழுக்களாக அமர்ந்து, அசல் சான்றிதழ்களை சரிபார்த்த பின், தேர்வர் விருப்பம் மற்றும் காலியிடத்தின் அடிப்படையில், இடங்களை ஒதுக்கினர். டி.என்.பி.எஸ்.சி., சார்பில் முன்கூட்டியே வழிகாட்டுதல்கள் வழங்கப்படாததால், பணியிடம் மற்றும் தங்களுக்கு தேவையான துறையை தேர்வு செய்வதில் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். தேர்வர்களுடன் வந்தவர்கள், டி.என்.பி.எஸ்.சி., வளாகத்தில் அனுமதிக்கப்படாததால், சாலையோரம் ஆங்காங்கே காத்திருந்தனர். மேலும், கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டவர்களும், தங்களுக்கான நேரத்துக்கு முன்கூட்டியே வந்ததால், அலுவலகத்துக்கு வெளியே தங்கள் அசல் சான்றிதழ்களுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதுகுறித்து, தேர்வர்களின் உறவினர்கள் கூறியதாவது:நீண்ட துாரத்தில் இருந்து சென்னை வந்துள்ளோம். ஆனால், எங்களை வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை. அலுவலகத்துக்கு வெளியே, சாலையில் அமர வேண்டிய நிலை உள்ளது. ஆயிரக்கணக்கானோரை அழைத்து கவுன்சிலிங் நடத்தும்போது, தேர்வர்களுடன் உதவிக்கு வருவோரை அமர வைப்பதற்கு உரிய ஏற்பாடுகளை, டி.என்.பி.எஸ்.சி., செய்ய வேண்டும். அதேபோல், கவுன்சிலிங் தொடர்பான வழிகாட்டுதல்களையும், முன்கூட்டியே வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்