உள்ளூர் செய்திகள்

தொல்லியல் துறைக்கு ரூ.40 கோடியில் மரபுசார் அருங்காட்சியகம்

சென்னை: சிவகங்கை மாவட்டம் கீழடி, துாத்துக்குடி மாவட்டம் பட்டணமருதுார், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார், நாகப்பட்டினம், கடலுார் மாவட்டம் மணிக்கொல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிச்சனுார், கோவை மாவட்டம் வெள்ளளூர், சேலம் மாவட்டம் தெலுங்கனுார் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்படும். மேலும், ஒடிசா மாநிலம் பாலுார், ஆந்திர மாநிலம் வெங்கி, கர்நாடக மாநிலம் மஸ்கி போன்ற இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.*அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை, தொல் மரபணுவியல், உலோகவியல், நுண்தாவரவியல், மகரந்தம், துாண்டொளி வெப்ப காலக்கணிப்பு, மட்பாண்டவியல் உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப பகுப்பாய்வுகளை, உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ள, 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.*பழந்தமிழர் கடல்வழி வணிக சிறப்பை அறிய, வெளிநாடுகளிலும் ஆய்வு செய்யப்படும். அதன் முதற்கட்டமாக, காவிரிபூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.*தமிழகத்தில் நடந்துள்ள அகழாய்வு பொருட்களை, உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் அழகாக காட்சிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வுகளை முன்னிலைப்படுத்த, 22 கோடி ரூபாயில், ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், சங்ககால பாண்டியர்களின் கடல்வழி வணிக சிறப்பை விளக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், 21 கோடி ரூபாயில், நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில், சிந்துவெளி பண்பாட்டு அரங்கம், மாமல்லபுரம், திருவண்ணாமலையில், தமிழ் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும்.*காலத்தை வென்ற கைவினைஞர்களின் கைவண்ணத்தில், ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட, 2,000க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள், எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள அழகான முத்திரைகள் கொண்ட சிற்பங்களை, வெளிநாட்டினருக்கு காட்சிப்படுத்தும் வகையில், எழும்பூர் அருங்காட்சியகத்தில், 40 கோடி ரூபாயில் மரபுசார் அரங்கம் அமைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்