உள்ளூர் செய்திகள்

மீடியா அனிமேஷன் துறையில் 7.5 லட்சம் வேலைவாய்ப்புகள்; மதுரையில் தினமலர் வழிகாட்டி: இனிதே நிறைவுற்றது

மதுரை: 'மீடியா, அனிமேஷன் துறையில் இன்னும் 5 ஆண்டுகளில் 7.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்' என மதுரை தினமலர் வழிகாட்டி நிறைவு நாள் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. மதுரை தமுக்கம் மைதானத்தில் தினமலர் நாளிதழ், ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் சார்பில் பிளஸ் 2 வுக்கு பின் உயர்கல்வியை தேர்வு செய்ய கல்வி ஆலோசனை வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று இனிதே நிறைவுற்றது.மூன்று நாட்கள் ஆரவாரமாக நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர் பங்கேற்று பயனடைந்தனர். கல்வி அரங்குகளில் குவிந்து உயர்கல்வி குறித்த பல்வேறு தகவல்களை ஒரே இடத்தில் பெற்றனர். நிறைவு நாள் நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், நிபுணர்கள் பேசியதாவது:டிஜிட்டல் மார்க்கெட்டிங், வணிகம் சுப்பிரமணியன், இயக்குநர், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்:பிளஸ் 2வுக்கு பின் அறிவியல், கலை, பொறியியல் படிப்புகளை தாண்டி பல்வேறு வித்தியாசமான படிப்புகள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் என்ன தொழில்நுட்பம் தேவை என்பது குறித்து புரிதல் வேண்டும். அந்த வகையில், அறிவியல், பொறியியல் அல்லாத டிஜிட்டல் மார்க்கெட்டிங், டிஜிட்டல் பேங்கிங், பின்டெக் துறை சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யலாம்.கூகுள் இன்ஸ்டா, யுடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் பொருட்கள், சேவைகளை விளம்பரப்படுத்தும் பணிகளுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு முடித்தோர் அதிகம் தேவையாக உள்ளனர். டிஜிட்டல் பேங்கிங், பின்டெக் துறைகளில் பி.காம்., பி.பி.ஏ., படிப்புகளுடன் அவை சார்ந்த ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை படித்து, டிஜிட்டல் விளம்பர துறைகளில் சாதிக்கலாம். இப்படிப்புகளை முடித்தால் ரூ.4 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பளம் பெறும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் இருந்தே டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து சம்பாதிக்கலாம். டிஜிட்டல் பேங்கிங் படித்தால் அரசு வங்கி, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றலாம். வங்கிகளில் பி.ஓ., ஆர்.பி.ஐ., கிரேடு பி உள்ளிட்ட வங்கி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதலாம்.மவுசு குறையாத வேளாண் படிப்புகள் வெங்கடேச பழனிசாமி, டீன், வேளாண்மை பல்கலை, கோவை:வேளாண் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. நிலைத்த தன்மை, நீண்ட எதிர்காலம் கொண்டவையாக இப்படிப்புகள் உள்ளன. தமிழகத்தில் வேளாண் பல்கலை, மதுரை, திருச்சி, காரைக்குடி உட்பட 18 உறுப்புக் கல்லுாரிகள், 28 இணைவிப்பு கல்லுாரிகள் உள்ளன. இது தவிர தனியார் கல்லுாரிகளும் வேளாண் படிப்புகளை வழங்குகின்றன. பி.எஸ்.சி., வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், வனம், பட்டுப்புழு தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளும், அக்ரி டெக்., உள்ளிட்ட பி.டெக்., படிப்புகளும் உள்ளன.இப்படிப்புகளுக்கு சேர மே 9 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கும். ஒரு மாதத்திற்கு பின் ரேங்க் லிஸ்ட் வெளியிட்டு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும். அதற்கான தகவல் அலைபேசி, இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.கல்லுாரிகளை சாய்ஸ் முறையில் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பிளஸ் 2 'கட்ஆப்' மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். கல்லுாரிகளில் சேர்ந்த பின் பல படிப்புகளுக்கு ஸ்காலர்ஷிப் வசதி உண்டு.கிரியேட்டிவிட்டி இருந்தால் அனிமேஷனில் அசத்தலாம் 'மீடியா அனிமேஷன் வி.எப்.எக்ஸ்.,' குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் கிஷோர் குமார் பேசியதாவது:வித்தியாசமான சிந்தனை, ஓவியம் வரைதல் உள்ளிட்ட திறமை உள்ள மாணவர்கள் மீடியா அண்ட் அனிமேஷன், வி.எப்.எக்ஸ்., துறைசார் படிப்புகளை தேர்வு செய்யலாம். தற்போது டிஜிட்டல் லேர்னிங், இலேர்னிங் துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு ஏற்ப அனிமேஷன் படித்தவர் தேவை அதிகம் உள்ளது. தற்போது 3 டி அனிமேஷன் தொழில் நுட்பத்தில் முழு சினிமாவை ஒரு அறைக்குள் இருந்து எடுத்து விடலாம். 'ஸ்கிரீனுக்கு' முன் 'ஸ்கிரீனுக்கு' பின் என ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. கேமிங் பிரிவில் ஓவியம் வரைதல், டிசைன் டெலவப்மெண்ட்டர்ஸ் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர்.மீடியா, அனிமேஷன் துறையில் 2030ல் 7.5 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படும். உட்கட்டமைப்பு, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஏ.ஐ., தொழில்நுட்பம் சார்ந்த கூடுதல் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். சினிமா, தொலைக்காட்சி சீரியல், ஓ.டி.டி., தளங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இப்படிப்பு முடித்தோர் அதிகம் தேவையாக உள்ளனர்.படிப்பு, வேலைவாய்ப்பு கவுன்சிலிங் கல்வியாளர் உஷா ஈஸ்வர் பேசியதாவது:இந்த 21ம் நுாற்றாண்டில் எந்த மாதிரியான எதிர்காலம், தொழில்நுட்பத்தை உருவாக்க போகிறோம் என்பதை ஒவ்வொரு மாணவர்களும் மனதில் கொள்ள வேண்டும். தற்போதுள்ள 'ஜென்சி' மாணவர்களுக்கு சிந்தனை, புதுமையான கண்டுபிடிப்பு திறன், டேட்டாவை புரிந்து கொள்ளும் அறிவு அதிகம் உள்ளது. இவர்கள் இன்டர்நெட் உலகத்தில் வாழ்கின்றனர்.தற்போதுள்ள ஏ.ஐ., தொழில்நுட்பங்கள் இன்னும் 10 ஆண்டுகளில் மாறி, அடுத்த தொழில்நுட்பம் வந்துவிடும். அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உலகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் பெரிய சவால். தங்களுக்கு உள்ள தனித்திறமை, கேரக்டர்களை கண்டறிய வேண்டும். அதற்கேற்ப வேலைவாய்ப்பை தேர்வு செய்ய வேண்டிய காலம் இது.வித்தியாசமாக சிந்திப்போர் தான் இக்காலத்தில் தேவை. அது தங்கள் சார்ந்த துறைகள் சார்பாக இருத்தல் வேண்டும். ஆர்வம் உள்ள துறைகளை தேர்வு செய்யுங்கள். நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதை இலக்காக வைத்து, அதற்கேற்ற படிப்பை தேர்வு செய்யுங்கள். திறமைகள் இருந்தால் நிறுவனங்கள் உங்களை தேடி வரும். நீங்கள் படித்த பட்டங்களை விட உங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறமையை தான் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. நீங்கள் பணியாற்றும் நிறுவன வளர்ச்சிக்கு காரணமாக இருந்தால் உங்களின் சம்பளமும் உயரும். டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, பிளாக் செயின், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜி., உள்ளிட்ட படிப்புகளுக்கு அதிக தேவை உள்ளது.இவ்வாறு பேசினர்.இந்நிகழ்ச்சிக்கு பவர்டு பை: கோவை ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யாபீடம். இணைந்து வழங்குபவர்கள்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,), பி.எஸ்.என்.ஏ., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை கே.எம்.சி.எச்., அண்ட் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், செட்டிநாடு அகாடமி ஆப் ரிசர்ச் அண்ட் எஜூகேஷன், சேலம் நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங். ஆடியோ பார்ட்னர் இன்போபஸ்.ஏப்., 4, 5ல் திண்டுக்கல்லில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிதிண்டுக்கல்லில் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., மகாலில் ஏப்., 4, 5 ஆகிய நாட்களில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. மதுரை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத மாணவர்கள், பெற்றோர் திண்டுக்கல் நிகழ்ச்சியை தவறவிடாதீர்கள்.விடை எழுதினால் ஸ்மார்ட் வாட்ச், டேப்லெட், லேப்டாப் பரிசுகாலை அமர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடை எழுதிய மதுரை பாத்திமா பர்வீன், சிவகங்கை மணிகண்டன், நிலக்கோட்டை ஹரிஹரன், விருதுநகர் ரித்திகா ஆகியோர் ஸ்மார்ட் வாட்ச், விருதுநகர் ஹரிணி டேப்லெட் பரிசு வென்றனர். மாலை அமர்வில் மதுரை பிரஜித், திலக், ராகவிஸ்ரீ, ஸ்ரீசிவப்பிரியா, சிங்கம்புணரி யுவதர்ஷிணி ஸ்மார்ட் வாட்ச், கீழடி ரித்திஷ்குமார் லேப்டாப் பரிசு வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்