உள்ளூர் செய்திகள்

உணவு பாதுகாப்புத்துறை பட்டியலில் 769 பள்ளிகள்; நான்கு கட்டங்களாக வழிகாட்டுதல் கூட்டம்

கோவை: தனியார் பள்ளிகளில் விடுதிகளில் உணவு மேலாண்மை, கேன்டீன் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சார்பில் நடத்தப்படும் ஈட் ரைட் ஸ்கூல் சான்றிதழ் பெறும் செயல்பாடுகளில் பங்கேற்க அறிவுறுத்தியும் , வட்டாரம் வாரியாக வழிகாட்டுதல் கூட்டம் உணவு பாதுகாப்புத்துறையால் நடத்தப்படுகிறது.கோவை மாவட்டத்தில்,சி.பி.எஸ்..இ., மெட்ரிக் பிரிவுகளின் கீழ், 769 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், உணவு பாதுகாப்பு செயல்பாடுகள், மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:கோவையில், 769 தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், விடுதிகளில் உணவு தயாரிப்பு, வினியோகம் செய்யப்படுகிறது.மேலும், பெரிய அளவிலும், சிறிய அளவிலும் கேன்டீன்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பழக்க வழக்கம் ஏற்படுத்துதல், உடல் பருமன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பள்ளிகளின் கடமை. பள்ளிகள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு பராமரிப்பு, பயிற்சி பெற்ற ஊழியர்கள், பாதுகாப்பான உணவு தயாரிப்பு முறை, பூச்சி மேலாண்மை, கழிவு மேலாண்மை உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் பின்பற்ற வேண்டும்.மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பழக்கவழக்கங்களை ஏற்படுத்தவும், கேன்டீன்களில் முடிந்த வரை துரித உணவு விற்பனை குறைத்து ஆரோக்கியமான உணவுகளை விற்பனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளோம். மேலும், பள்ளிகள் 'ஈட் ரைட் ஸ்கூல்' சான்றிதழ் பெற விண்ணப்பிக்க கூறியுள்ளோம். கடந்தாண்டு, 38 பள்ளிகள் இச்சான்றிதழ் பெற விண்ணப்பித்து, 22 பள்ளிகள் சான்றிதழ் பெற்றுள்ளனர். நடப்பாண்டில், அனைத்து பள்ளிகளும் பங்கேற்க ஊக்கப்படுத்தியுள்ளோம். பள்ளி முதல்வர்கள் ஆர்வமாக கூட்டத்தில் பங்கேற்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.முதல்கட்டமாக கார்மல் கார்டன் பள்ளியில் நடந்த கூட்டத்தில், 195 பள்ளி முதல்வர்களும், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் 180 பள்ளி முதல்வர்களும் நேற்று உப்பிலிபாளையம் எஸ்.எஸ்.வி.எம்., எக்சலன்ஸ் 170 முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து இன்றும், அரிசிபாளையம் தனியார் பள்ளியில் முதல்வர்களுக்கான நான்காம் கட்ட கூட்டம் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்