உள்ளூர் செய்திகள்

குழந்தை பெற்றெடுக்கும் மாணவியருக்கு ரூ.84,000 ஊக்கத்தொகை; ரஷ்யா அதிரடி

மாஸ்கோ: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும், 25 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு 84,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.குறைவான பிறப்பு விகிதம், முதியவர்களின் இறப்பு மற்றும் குடியேற்றம் காரணமாக ரஷ்யாவின் மக்கள்தொகை வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக, உக்ரைனுடனான போர் காரணமாக, இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.இதனால், ரஷ்ய வரலாற்றில் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியில், 5,99,600 குழந்தைகள் மட்டுமே இங்கு பிறந்துள்ளன.இது, 25 ஆண்டுகளில் மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கையாக உள்ளது.இதனால், ஊக்கத்தொகை, வீட்டு வசதி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக பிறப்பு விகிதங்களை அதிகரிக்க ரஷ்ய அரசு முயற்சித்து வருகிறது. இருப்பினும், இந்த முயற்சிகள் குறைந்த அளவே வெற்றி அடைந்துள்ளதால், மாற்று திட்டங்களை அந்நாட்டு அரசு அறிவித்து வருகிறது.இதன்படி, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு, இந்திய மதிப்பில் 84,000 ரூபாய் வழங்க ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் உள்ளூர் பல்கலை அல்லது கல்லுாரியில் முழுநேர மாணவியராகவும், கரேலியா மாகாணத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இறந்து பிறக்கும் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திடீர் நோய் பாதிப்பு காரணமாக குழந்தை இறந்துவிட்டால், ஊக்கத்தொகை ரத்து செய்யப்படுமா என்பது பற்றி தெளிவான அறிவிப்பு எதுவுமில்லை.மேலும், ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கும் இளம் தாய்மார்கள், இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்களா என்பதையும் அறிவிப்பில் குறிப்பிடவில்லை.ரஷ்யாவில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு சில மாகாணங்களில், இந்த ஆண்டு முதல் முதன்முறையாக தாய்மை அடைவோருக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இரண்டாவது குழந்தை பெறுவோருக்கு 8 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்