உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு

திட்டக் குழுவின் துணைத் தலைவரான புகழ் பெற்ற பொருளாதார வல்லுனர் மாண்டேக் சிங் அலுவாலியா பெண்களுக்கென்று தனி ஐ.ஐ.டி. நிறுப்பட வேண்டும் என்னும் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாடீலின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். உலகெங்கும் பெண்களுக்கென்றே பிரத்யேகமான உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஜனாதிபதியின் இந்த கோரிக்கையானது ஏற்கனவே பிரதமரின் செகரடரியேட் மற்றும் மத்திய மனித வளத் துறை அமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு திட்டக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அமராவதி நகரில் பெண்களுக்கான ஐ.ஐ.டி. நிறுவப்பட்டால் அது பெண் கல்விக்கான மிகச் சிறப்பான ஊக்கமாக மாறும் என்று பிரதமர் அலுவலகம் கருதியது. ஆனால் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் என்.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் பெண்களுக்காக நிறுவப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகள் அதிகமாக எழும் என திட்டக்குழு கருதியதால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனினும் இந்த நிராகரிப்போடு கோரிக்கை நிறுத்தப்படாது என்றும் மீண்டும் முயற்சிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது. பெப்ஸிகோ தலைவர் இந்திரா நூயியின் எழுச்சியின் பின்பு பெண்களுக்கான சிறப்பு மேனேஜ்மென்ட் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் தேவை என்னும் கருத்து கல்வித் துறையில் நிலவி வருகிறது. மேலை நாடுகளில் பெண்களுக்கான உயர் கல்வி நிறுவனங்கள் சாதாரணமாக துவங்கப்படுகின்றன என்பதும் ஜப்பானில் மட்டும் இது போன்ற சிறப்புப் பெண் பல்கலைக்கழகங்கள் 10 இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்