ஆன்லைனில் தமிழ் கல்வி
தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்துகொள்ள ஏதுவாக பல்வேறு அரிய தகவல்களை இப்பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் வழங்கி வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் வெளிநாடு வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. இணையதளம் மூலமாக தமிழ் மொழியை கற்பித்தல், ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்களைக் கொண்ட மின் நூலகத்தை அனைவருக்கும் வழங்குதல், ஓலைச் சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கல், அகராதி மற்றும் கலைச்சொல் தொகுப்புகளை வெளியிடுதல், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட தகவல்களை எழுத்து மற்றும் வீடியோ வடிவிலும் வழங்குதல், தமிழ் வளர்ச்சியை கருத்தில் கொண்டு குறுந்தகடு (சி.டி.) தயாரித்தல் என பல்வேறு பணிகளை செய்து வருகிறது தமிழ் இணையப் பல்கலைக்கழகம். தமிழ் மொழியில் மழலையர் நிலை முதல் ஆய்வு வரையிலான பாடங்களை இப்பல்கலைக்கழகம் ஆன்லைனில் வழங்கி வருகிறது. சான்றிதழ், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, இளநிலை பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு ஆகிய படிப்புகள் தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. குழந்தைகள் பள்ளி செல்வதற்கு முன், சுயமாக பாடங்களைப் பாடல் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கற்கும் வகையில் மழலைக் கல்வி என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. இதில், எழுத்துகள், உரையாடல், கதைகள், பாடல்கள், வழக்குச் சொற்கள், எண்கள், ஆகியவை படங்கள், இயக்கப் படங்கள், ஒலி, ஒளிக் காட்சிகள் வாயிலாக கற்பிக்கப்படுகின்றன. அடிப்படை இடைநிலை, மேல்நிலை ஆகிய மூன்று நிலைகளை சான்றிதழ் கல்வி கொண்டுள்ளது. இதை நிறைவு செய்தால் தமிழகத்தின் ஆறாம் வகுப்புக்குச் சமமான தமிழ் அறிவு பெற முடியும். மேற்சான்றிதழ் கல்வியும் மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. இந்த மேற்சான்றிதழ் படிப்பை படிப்பவர்கள் 12ம் வகுப்புக்கு இணையான தமிழ் அறிவைப் பெற முடியும். இவை தவிர மூன்றாண்டு பி.ஏ. தமிழியல் படிப்பும் வழங்கப்படுகிறது. இப்படிப்புகளில் எந்த வயதினரும் சேரலாம். பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வு நடத்த உலகின் பல்வேறு பகுதிகளில் 36 தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பற்றி அதன் இயக்குனர் நக்கீரன் கல்விமலர் நிருபரிடம் கூறியதாவது:தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் அனைத்தும் அன்லைனில் வழங்கப்படுகின்றன. இப்பாடங்களை யார் வேண்டுமானாலும் பல்கலைக்கழக இணையதளத்தில் இலவசமாக பார்த்து தங்களது தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இப்பல்கலைக்கழக இணையதளத்தில் ( http://www.tamilvu.org/ ) இதுவரை 7 ஆயிரம் பேர் பல்கலைக்கழக பதிவு செய்துள்ளனர். தற்போது ஆங்கில மொழி வாயிலாக தமிழ் கற்பிக்கப்படுகிறது. பிரெஞ்ச், ஸ்பெயின் ஆகிய மொழிகளின் வாயிலாகவும் தமிழ் மொழியை கற்பிக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அனைத்து சங்க இலக்கியங்களும், ‘ஸ்கேன்’ செய்யப்பட்ட 25 ஆயிரம் ஓலைச்சுவடிகளும் டிஜிட்டல் முறையில் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழ் பல்கலைக்கழகம் தயாரித்து வரும் கலைச்சொல் பேரகராதிகளில் இதுவரை 6 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் 2.5 லட்சம் கலைச்சொற்களை தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையதளத்தில் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். இதுதவிர மின் நூலகத்தில் தமிழ் இலக்கண உரை, சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் ஆகியவற்றை ஒருங்கே பெற்றுள்ளன. தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் நாட்டியம், கரகம், காவடியாட்டம், ஒயிலாட்டம், கும்மி, தெருக்கூத்து போன்ற தமிழக கலைகள்; ஜல்லிக்கட்டு, சிலம்பம், பல்லாங்குழி, தாயம், சேவல் சண்டை, பம்பரம் ஆகிய தமிழக விளையாட்டுக்கள்; மாமல்லபுரம், கன்னியாகுமரி, சித்தன்னவாசல் போன்ற வரலாற்றுச் சின்னங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வீடியோ முறையில் பார்த்து உணர்ந்து கொள்ளலாம். இவைதவிர, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் மென்பொருள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு இயக்குனர் நக்கீரன் தெரிவித்தார். இவ்வாறு தமிழ் மொழியை கற்பிப்பதோடு மட்டுமின்றி, தமிழ், தமிழர், தமிழகம் குறித்த பல்வேறு தகவல்களை உலகின் எப்பகுதியிலும், யார் வேண்டுமானாலும் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையிலான பணியை செய்யும் இப்பல்கலைக்கழகம் குறித்து இன்னும் தமிழகத்திலேயே போதிய விழிப்புணர்வு இல்லை என்பது சற்று வருத்தத்திற்குரியதுதான்.