சுயநிதி பாடப்பிரிவுக்கு கட்டுப்பாடு
தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகளில் 170 அரசு கல்லுாரிகள், 162 அரசு உதவி பெறுபவை, 1,594 சுயநிதி கல்லுாரிகள், இன்ஜினியரிங்கில், மூன்று அரசு உதவி பெறும் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் ஆசிரியர் சம்பளம் மற்றும் பிற பராமரிப்பு பணிகளுக்கு, அரசின் சார்பில் நிதி வழங்கப்படுகிறது. எனவே சுயநிதி கல்லுாரிகள் போல் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் கட்டணம் வசூலிக்கவோ சுதந்திரமாக மாணவர்களை சேர்க்கவோ அனுமதியில்லை.சமீப ஆண்டுகளாக, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் சுயநிதி பாடப்பிரிவுகள் என்ற பெயரில் கூடுதல் பாடப்பிரிவுகளுக்கு அனுமதி பெற்று நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சுயநிதி கல்லுாரிகள் போல் மாணவர்களின் அதிக கட்டணம் மற்றும் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்களே, சுயநிதி பாடப்பிரிவுகளுக்கும் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இதனால் அரசு உதவி பாடப்பிரிவு மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்த முடியாமல் கற்பித்தலில் அவர்கள் பின்னுக்கு தள்ளப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து உயர்கல்வித்துறை சார்பில் கல்லுாரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் இனி சுயநிதி பாடப்பிரிவுகளை துவங்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.சுயநிதி பாடப்பிரிவு துவங்கினால் அதற்காக தனி வகுப்பறை, ஆசிரியர், பணியாளர் நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் இருக்க வேண்டும். அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களை, சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு பயன்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதற்கான வரைவு விதிகள், விரைவில் பல்கலைகளுக்கு அனுப்பி கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக உயர்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.